துபாய், மார்ச் 29- சொந்த மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் திட்டத்தை சவுதி அரேபியா செயல்படுத்த திட்டமிட்டுள்ளதால் அந்நாட்டில் பல்வேறு சிறிய வேலைகளில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எகிப்தில் வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் அங்கு அரசுக்கு எதிராக மக்கள் கொந்தளிக்க ஆரம்பித்தனர்.
இதேபோன்ற நிலை தான் வேறு சில அரபு நாடுகளிலும் நடந்தது. இந்நிலையில், தற்போது சவுதி அரேபியாவிலும் வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.
அந்நாட்டின் மத்திய புள்ளியியல் மற்றும் தகவல் துறை திரட்டிய விவரத்தில், கடந்த ஆண்டில் மக்கள் தொகையில் 12.2 சதவீதம் பேர், அதாவது 5,88,000 பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இவர்களில் 39 சதவீதத்தினர் 15 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து சொந்த மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், நிதாகத் என்ற திட்டத்தை சவுதி அரேபிய அரசு தயாரித்துள்ளது. இந்த புதிய தொழிலாளர் சட்டத்தின்படி, 10 தொழிலாளர்களுக்கு மேல் கொண்ட ஒவ்வொரு நிறுவனமும், உள்நாட்டு மக்களில் இத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உள்நாட்டு மக்களை சுத்தமாக பணியில் சேர்த்துக் கொள்ளாத நிறுவனங்கள் சிவப்பு பட்டியலிலும், உள்நாட்டு மக்களுக்கு அளிக்க வேண்டிய வேலைவாய்ப்பு எண்ணிக்கை இலக்கில் குறைவாக உள்ள நிறுவனங்கள் மஞ்சள் பட்டியலிலும், முழுமையாக இலக்கை எட்டிய நிறுவனங்கள் பச்சை பட்டியலிலும் வைக்கப்பட்டுள்ளன.
இவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்க அந்நாட்டு தொழிலாளர் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதனால் ஏற்கனவே இந்நிறுவனங்களில் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது சவுதி அரேபியாவில் சுமார் 20 லட்சம் இந்தியர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் வேலையிழக்கும் நிலையில், அவர்களுக்கான குடியிருப்பு அனுமதியும் ரத்தாகும். இதனால் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலையில் லட்சக்கணக்கான இந்தியர்கள் உள்ளனர்.