சென்னை – திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் உடல் நலம் நேற்றிரவு திடீரென மீண்டும் குன்றியதைத் தொடர்ந்து – அவரது இரத்த அழுத்தம் திடீரெனக் குறைந்ததைத் தொடர்ந்து – அவர் இன்று சனிக்கிழமை அதிகாலையில் காவேரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இதன் தொடர்பிலான ஆகக் கடைசியான தகவல்கள் வருமாறு:
- இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என அந்த மருத்துவமனை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
- படுக்கையில் படுத்தபடி இருக்கும் கருணாநிதியை அவரது இல்லத்தின் மேல்மாடியில் இருந்து தூக்கி வந்து அவசர சிகிச்சை ஊர்தி (ஆம்புலன்ஸ்) மூலம் காவேரி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட காட்சியை இந்தியத் தொலைக்காட்சி ஊடகங்கள் ஒளிபரப்பின.
- அதைத் தொடர்ந்து பல தலைவர்கள் தொடர்ந்து மருத்துவமனைக்கு வருகை தந்து அங்குள்ள கலைஞரின் உறவினர்களிடமும், மருத்துவர்களிடமும் விளக்கம் பெற்று வருகின்றனர்.
- நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்களும் மருத்துவமனையின் முன் குவிந்துள்ளனர்.
- கருணாநிதியின் இரத்த அழுத்தம் குறைந்ததைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது எனத் தெரிவித்த காவேரி மருத்துவமனை அவரது இரத்த அழுத்தம் தற்போது சீராக இருப்பதாகவும் சிறந்த மருத்துவர்களைக் கொண்ட குழு ஒன்று அவரைத் தொடர்ந்து கண்காணித்து தேவையான சிகிச்சைகளை வழங்கி வருகிறார்கள் என்றும் காவேரி மருத்துவமனை தெரிவித்தது.
கருணாநிதிக்கு உணவு செலுத்தும் செயற்கை குழாய் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு சிறுநீரகப் பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக அவருக்கு வீட்டிலேயே தொடர்ந்து சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன. அவரது இல்லத்தை மருத்துவ வசதிகளோடு காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் மாற்றியமைத்தனர்.
பல தலைவர்கள் அவரது கோபாலபுரம் இல்லம் சென்று மு.க.ஸ்டாலினைச் சந்தித்து நலம் விசாரித்தனர்.
எனினும் அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்ததைத் தொடர்ந்து அவர் தற்போது காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
கடந்த ஜூன் 3-ஆம் தேதி தனது 95-வது வயது பிறந்த நாளை கருணாநிதி கொண்டாடினார். நேற்றுடன் அவர் திமுக தலைவராகப் பொறுப்பேற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.