Home நாடு இராமசாமி – பெர்லிஸ் முப்டி சந்திப்பு சுமுகமாக முடிந்தது

இராமசாமி – பெர்லிஸ் முப்டி சந்திப்பு சுமுகமாக முடிந்தது

1243
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – விடுதலைப் புலிகள் விவகாரத்தில் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி மற்றும் பெர்லிஸ் மாநில இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான தலைவர் (முப்டி) டத்தோ டாக்டர் முகமட் அஸ்ரி சைனுல் அபிடின் இடையிலான நல்லிணக்கப் பேச்சுவார்த்தை மத விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ டாக்டர் முஜாஹிட் யூசோப் ரவா ஏற்பாட்டில்  நேற்று திங்கட்கிழமை சுமுகமாக நடைபெற்று முடிந்தது.

நேற்று பிற்பகலில் புத்ரா ஜெயாவிலுள்ள முஜாஹிட்டின் அலுவலகத்தில் நடைபெற்ற அந்த சந்திப்பில் கலந்து கொள்ள வருகை தந்த இராமசாமியை நேரில் எதிர்கொண்டு வரவேற்ற முஜாஹிட் மத நல்லிணக்க நோக்கிலும், கருத்து வேறுபாடுகளைக் களையும் நோக்கிலும் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறினார்.

இராமசாமியை வரவேற்கும் முஜாஹிட்

சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்ற – நட்புறவு அடிப்படையிலான – இந்த முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடைந்த பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த மூவரும் பேச்சுவார்த்தைகள் சுமுகமான முறையில் நடைபெற்றதாகவும் புரிந்துணர்வு அடிப்படையில் சில முடிவுகளைத் தாங்கள் எடுத்துள்ளதாகவும் அறிவித்தனர்.

#TamilSchoolmychoice

அதன்படி, விடுதலைப் புலிகள் விவகாரத்தை சம்பந்தப்பட்ட அரசாங்கத் துறையிடம் விட்டு விடுவதாகவும், சாகிர் நாயக் விவகாரத்தில், எந்த முடிவு எடுப்பது என்பதை அரசாங்கத்திடமே விட்டுவிடுவதாக அவர்கள் தெரிவித்தனர். அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு தாங்கள் கட்டுப்படுவதாக சந்திப்பின்போது தெரிவித்ததாகவும் எந்த சூழலிலும் மத நல்லிணக்கமும், ஒற்றுமையும் பேணப்பட வேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டதாகவும் முஜாஹிட் குறிப்பிட்டார்.

சந்திப்பிற்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய இராமசாமி, இந்த சந்திப்புக்கு வருவதற்கு முன்பே தன்மீது பலவிதமான குறைகூறல்கள் எழுப்பப்பட்டன என்றும் எனினும் மலேசியர்களிடையே மத புரிந்துணர்வு நிலவ வேண்டும் என்பதுதான் தனது குறிக்கோள் என்றும் அதற்காக யாரையும் எந்த சூழ்நிலையிலும் சந்திக்கத் தான் தயார் என்றும் கூறினார்.

“ஒரு பிரச்சனைக்காக சந்திப்பு ஒன்றை நடத்துவது என்பதே வெற்றிதான். மாறாக, அந்த சந்திப்போ பேச்சுவார்த்தையோ தோல்வியில் முடிந்தாலும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினோம் என்பதே ஒரு வெற்றிதான். எனவே, சுமுகமாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்த முஜாஹிட்டுக்கு நன்றி கூறுகிறேன்” என இராமசாமி தெரிவித்தார்.

கருத்து மோதல்கள் களைந்து இணைந்த கரங்கள்

தனது கருத்துக்களைத் தெரிவித்த பெர்லிஸ் முப்டி முகமட் அஸ்ரி சைனுல் அபிடின், அரசாங்கம் இதுபோன்ற பேச்சுவார்த்தைகளுக்கான, கருத்துப் பரிமாற்றங்களுக்கான தளங்களை ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். “அவ்வாறு தளங்கள் இருப்பின் நமது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்கள் கருத்தை கேட்டறியவும் முடியும். அவ்வாறு இல்லாத காரணத்தால்தான் சாகிர் நாயக், விடுதலைப் புலிகள் போன்ற விவகாரங்களில் கருத்து மோதல்கள் ஏற்படும் நிலைமை உருவானது. எந்த மதத்தைச் சார்ந்ததாக இருந்ததாக பயங்கரவாதம் எதிர்க்கப்பட வேண்டும். அதே வேளையில் பல இனங்கள், மதங்கள் கொண்ட நமது நாட்டில், மத நல்லிணக்கம் பேணப்பட வேண்டியது அவசியம் என்பதால், கருத்துகள் கூறும்போது மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு கருத்துகளை வெளியிட வேண்டும்” என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.