இந்தத் தகவலை வெளியிட்ட பினாங்கு முதல்வர் சௌ கோன் இயோ, விடுதலைப் புலிகளுடனான இராமசாமியின் ஈடுபாடு அமைதி ஏற்படுத்துவதையும், சமாதானத்தையும் அடிப்படையாகக் கொண்டது என அவர் பல முறை தன்னிலை விளக்கம் அளித்தும் இன்னும் பலர் அது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர் எனக் கூறினார்.
“எனவே, முஜாஹிட் இராமசாமியைத் தொடர்பு கொண்டு இந்த விவகாரம் குறித்து விவாதிக்க சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது” என்றும் சௌ மேலும் கூறினார்.
ஏற்கனவே, ஜசெகவும் இராமசாமியிடம் விடுதலைப் புலிகள் விவகாரம் குறித்து விளக்கம் கேட்கும் என சௌ கோன் இயோ அறிவித்திருந்தார்.
இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் இராமசாமி நான் தீவிரவாதத்தையோ, தீவிரவாதிகளையோ ஆதரிப்பவன் அல்ல, மாறாக அமைதிக்காகவும், சமாதானத்துக்காகவும், மனித உரிமைக்காகவும் போராடுபவன் நான் எனக் கூறியிருக்கிறார்.
“நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்ற குற்றச்சாட்டு உண்மையல்ல. விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபாடு கொண்டதற்காக இவ்வாறு குற்றம் சாட்டுகிறார்கள். சாகிர் நாயக்கை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என நான் அரசாங்கத்தை வலியுறுத்தும் போதெல்லாம் அதை திசை திருப்புவதற்காக விடுதலைப் புலிகள் விவகாரத்தை எழுப்புகிறார்கள்” என்றும் இராமசாமி சுட்டிக் காட்டினார்.
1981 முதல் 2005 வரை 26 ஆண்டு காலம் தேசியப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி வந்த காலகட்டத்தில் தென் அமெரிக்காவின் கொலம்பியா, இலங்கை, ஆச்சே (இந்தோனிசியா), மிண்டானோ (பிலிப்பைன்ஸ்) ஆகிய வட்டாரங்களில் ஏற்பட்ட நெருக்கடிகளைத் தணிக்க சமாதான நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டிருப்பதாகவும் இராமசாமி மேலும் தனது அறிக்கையில் தெரிவித்தார்.
“நான் அமைதிக்காகவும், சுதந்திரத்துக்காகவும் போராடுபவன். அதில் நம்பிக்கை கொண்டவன். மாறாக, ஆயுதம் தாங்கிய போராட்டத்தை ஆதரிப்பவன் அல்ல, அவை அழிவைக் கொண்டுவரும் என்பதை அறிந்திருக்கிறேன்” என்றும் இராமசாமி கூறியிருக்கிறார்.
இராமசாமி தடை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான தொடர்புகளைக் கொண்டிருந்தார் எனவும், அவரது மகன் திருமணத்திற்கு தமிழக அரசியல் தலைவரும், விடுதலைப் புலிகள் ஆதரவாளருமான வைகோ வருகை தந்திருப்பது தொடர்பிலும் 50-க்கும் மேற்பட்ட காவல்துறைப் புகார்கள் இராமசாமிக்கு எதிராக செய்யப்பட்டிருந்தன. வைகோவுடன் இராமசாமி இருக்கும் புகைப்படங்கள் அவரது முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்ததைத் தொடர்ந்து இந்தப் புகார்கள் செய்யப்பட்டன.
இராமசாமியும் காவல் துறையில் தனது சார்பாக புகார் ஒன்றை செய்திருக்கிறார்.