Home நாடு கோல லங்காட்டில் இந்தியர் மாணவர் விடுதி – சேவியர் அறிவிப்பு

கோல லங்காட்டில் இந்தியர் மாணவர் விடுதி – சேவியர் அறிவிப்பு

995
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தனது நாடாளுமன்றத் தொகுதியான சிலாங்கூர், கோல லங்காட்டில் இந்தியர்களுக்கான மாணவர் விடுதி ஒன்று நிர்மாணிக்கப்படுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீர்வளம், நிலம் மற்றும் இயற்கை வள அமைச்சர் சேவியர் ஜெயகுமார் அறிவித்துள்ளார்.

கோல லங்காட் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமான அவர் கடந்த சனிக்கிழமை ஜூலை 28-ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெற்ற நேசா கூட்டுறவுக் கழகத்தின் சிறந்த மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

“கிராமப்புற மற்றும் பின்தங்கிய மலாய் மாணவர்கள் கல்வியில் முன்னேறியதற்கான ஒரு காரணம் பெல்டா போன்ற நிலத்திட்டங்களில் அவர்களுக்கென அனைத்து வசதிகளோடும் பிரத்தியேக மாணவர் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு அவர்கள் அங்கேயே தங்கி கல்வி கற்றதுதான். அதே போன்ற சூழலை இந்திய மாணவர்களுக்கும் உருவாக்க கிள்ளான் மிட்லண்ட்ஸ் தமிழ்ப் பள்ளியில் எனது முயற்சியில் கட்டப்பட்ட மாணவர் தங்கும் விடுதி இந்த ஆண்டு நிறைவு பெற்று செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கிறேன். அதே போன்றதொரு விடுதியை எனது தொகுதியான கோல லங்காட்டிலும் சைம் டார்பி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் நிர்மாணிப்பேன்” எனவும் சேவியர் தனதுரையில் மேலும் தெரிவித்தார்.

“இந்திய சமுதாயம் தமிழ்ப் பள்ளிகளுக்கு உதவ வேண்டும்”

#TamilSchoolmychoice

தமிழ்ப் பள்ளிகளுக்கு இந்திய சமுதாயமே நேரடியாக உதவும் – நிதிகளை வழங்கும் – சூழல் உருவாக வேண்டும் என்றும் சேவியர் கேட்டுக் கொண்டார். “தமிழ்ப் பள்ளிகள் என்று வரும்போது எல்லாவற்றையும் அரசாங்கமே செய்யவேண்டும் என்ற மனோநிலை நம்மிடையே நிலவுகின்றது. ஆனால், ஆலயங்கள் என்று வரும்போது இந்தியர்கள் ஏராளமாக அள்ளி வழங்குகின்றனர். இது தவறென்று சொல்லவில்லை. ஆனால் அதே அளவுக்கு அக்கறையை தமிழ்ப் பள்ளிகள் மீதும் இந்திய சமுதாயம் காட்டினால் தமிழ்ப் பள்ளிகளின் நிலைமை மேம்படும். தமிழ்ப் பள்ளி மாணவர்களின் தரமும் தேர்ச்சி விழுக்காடும் உயரும்” என்றும் சேவியர் குறிப்பிட்டார்.

தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் ஆசிரியர், மாணவர் விழுக்காடு அந்தப் பள்ளி வகுப்புகளில் சிறப்பான முறையில் இயங்குகிறது என்பதையும் சேவியர் சுட்டிக் காட்டினார். ஒரு வகுப்பில் 40 அல்லது 50 மாணவர்கள் இருந்தால் அந்த ஆசிரியரால் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கல்வி கற்பிக்க முடியாது, ஆனால் அதே சமயம் 15 அல்லது 20 மாணவர்கள் இருந்தால் ஆசிரியர்கள் தனிக் கவனிப்புடன் சிறந்த முறையில் பாடம் நடத்த முடியும். தமிழ்ப் பள்ளிகளில் தற்போது இந்த நிலைமை இருக்கிறது. இதைத்தான் கல்வி ஆய்வுகளும் ஆதரிக்கின்றன என்றும் சேவியர் தெரிவித்தார்.

நேசா கூட்டுறவுக் கழகம் சிறந்த மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிதி வழங்குவதைப் பாராட்டிய சேவியர் அதே வேளையில், குறைந்த தேர்ச்சி பெறும் மாணவர்கள், கல்வியைப் பாதியிலேயே தொடர முடியாமல் பள்ளியில் இருந்து வெளியேறும் மாணவர்கள் எனப் பாதிப்புற்றிருக்கும் இந்திய மாணவர்களை முன்னேற்றுவது குறித்தும் இந்திய இயக்கங்கள் சிந்தித்து பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். காரணம், இவர்களால்தான் இந்திய சமுதாயத்தில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன – இந்திய சமுதாயமும் பின்தங்குகிறது என்றார் அவர்.

“போராடினால்தான் வெற்றி”

“மாணவர்கள் தொடர்ந்து எல்லா முனைகளிலும் போராட வேண்டும். கனவு காண வேண்டும். அப்போதுதான் வெற்றியடைய முடியும்” எனவும் மாணவர்களுக்கு அறிவுறுத்திய அவர் “20 ஆண்டுகளுக்கு முன்னால் நாங்கள் எல்லாம் அரசியலில் இறங்கி மாற்றத்தைக் கொண்டுவரும் போராட்டத்தைத் தொடங்கியபோது எங்களுக்கும் அந்த மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்ற கனவு இருந்தது. அதை நோக்கிப் போராடினோம். இன்று வெற்றி பெற்றோம். எனவே, எல்லாத் துறைகளுக்கும் போராட்டம் என்பது பொருந்தும்” என்று கூறினார்.

எஸ்.பி.எம் மற்றும் எஸ்டிபிஎம் தேர்வுகளில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற நேசா உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு ஊக்குவிப்பு நிதியை நேசா கூட்டுறவுக் கழகம் ஆண்டு தோறும் வழங்கி வருகின்றது. கடந்த 2017-ஆம் ஆண்டில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற எஸ்பிஎம் மற்றும் எஸ்டிபிஎம் மாணவர்களுக்கான நேசா கல்வி ஊக்குவிப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே சேவியர் ஜெயகுமார் மேற்கண்டவாறு கூறினார்.

நேசா கூட்டுறவுக் கழகத்தின் துணைப் பொது நிர்வாகி கே.ஹரிகிருஷ்ணன் வரவேற்புரையாற்றிய இந்த நிகழ்ச்சியில் நேசா இயக்குநர் வாரியத்தின் இடைக்காலத் தலைவர் டாக்டர் அ.இலட்சுமணன் தலைமையுரையாற்றினார்.