சிப்பாங் – துன் மகாதீர் ஆட்சிக் காலத்தில் அவர் கொண்டு வந்த குறிப்பிடத்தக்கத் திட்டங்களில் ஒன்று எஃப் 1 (F1) அனைத்துலக கார் பந்தயம். இதனை மலேசியாவில் நடத்துவதற்காகவே சிப்பாங்கில் பிரத்தியேக கார் பந்தயத் தடத்துடன் கூடிய பிரம்மாண்டமான மையம் ஒன்றும் கட்டப்பட்டது.
ஆனால், பல காரணங்களால் இந்தக் கார் பந்தயம் கடந்த ஆண்டோடு நிறுத்தப்பட்டது. அதனை மீண்டும் கொண்டு வரும் சாத்தியத்தை மறுப்பதற்கில்லை என மகாதீர் கூறியுள்ளார்.
நேற்று சிப்பாங் அனைத்துலகக் கார் பந்தயத் தடத்தில் வரிசை விளக்குகள் பொருத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே மகாதீர் இவ்வாறு கூறினார்.
விளக்குகள் பொருத்தப்பட்டதன் அடையாளமாக 5.543 கிலோ மீட்டர் தூரமுள்ள கார் பந்தயத் தடத்தில் பெராரி கார் ஒன்றை மகாதீரே நேற்றிரவு ஓட்டிச் சென்றார்.
எஃப் 1 கார் பந்தயத்தை இரவிலும் நடத்துவதென்றால் அதற்குரிய விளக்குகளின் ஒளி உமிழும் ஆற்றல் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதால் புதிய விளக்குகளின் வரிசைகள் இங்கு நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாகவே, இந்தப் போட்டிகள் மீண்டும் மலேசியாவுக்குத் திரும்பும் என்ற ஆரூடங்கள் எழுந்திருக்கின்றன.
இந்த நிகழ்ச்சியில் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக்கும் கலந்து கொண்டார். எஃப் 1 பந்தயம் மீண்டும் நாட்டுக்குத் திரும்புவது குறித்து அமைச்சரவை முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.