

சென்னை – (மலேசிய நேரம் மாலை 7.30 மணி நிலவரம்) உலகப் புகழ்பெற்ற சென்னை மெரினா கடலோரத்தின் காற்று வீசும் இனிய சூழலில் – தான் இறந்தும் போராடி பெற்ற இடத்தில் – வாழ்நாளெல்லாம் தனது அரசியல் குருவாய், வழிகாட்டியாய் அவர் கொண்டாடிய பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்திற்கு அருகில் – நிரந்தரத் துயில் கொள்ள இராஜாஜி அரங்கத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கிறார் கலைஞர்.
அவரது நல்லுடல் தாங்கிய இராணுவ வாகனம் அனைத்து மரியாதைகளுடன் சென்று கொண்டிருக்க, வாகனத்தின் முன்னால் மு.க.ஸ்டாலின் உட்பட முக்கிய திமுக தலைவர்கள் நடந்தே சென்று கொண்டிருக்கின்றனர்.
பேராசிரியர் அன்பழகன், தமிழக அரசின் சார்பில் அமைச்சர் ஜெயகுமார், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ஆகியோர் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள கலைஞரின் நல்லுடலுக்காகக் காத்திருக்கின்றனர்.

