Home நாடு ஜிஎஸ்டி வசூல் : மாயமான 18 பில்லியன் ரிங்கிட்

ஜிஎஸ்டி வசூல் : மாயமான 18 பில்லியன் ரிங்கிட்

1610
0
SHARE
Ad

கோலாலம்பூர் – முந்தைய தேசிய முன்னணி அரசாங்கத்தின் கீழ் வசூல் செய்யப்பட்ட நிதி அமைச்சின் 18 பில்லியன் ரிங்கிட் கணக்கில் கொண்டு வரப்படாமல் மாயமாகி இருப்பதாக நிதி அமைச்சர் லிம் குவான் எங் பரபரப்பான தகவலை வெளியிட்டிருக்கிறார். இந்தப் பணம் எங்கு திசை திருப்பிவிடப்பட்டது என்பது குறித்து நிதி அமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளருக்குத் தெரிந்திருக்கலாம் என்றும் அவர் மேலும் கூறியிருக்கிறார்.

இதுகுறித்த விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் லிம் குவான் எங் தெரிவித்தார். தேசிய முன்னணி ஆட்சியில் நிதி அமைச்சின் தலைமைச் செயலாளராக டான்ஸ்ரீ இர்வான் செரிகார் பதவி வகித்து வந்தார்.

வசூல் செய்யப்படும் ஜிஎஸ்டி பணம் அரசாங்கத்திற்குச் சொந்தமான ஓர் அறவாரியக் கணக்கில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். “ஆனால் இந்தக் கணக்கில் 18 பில்லியன் ரிங்கிட் குறைகிறது. இந்தப் பணம் எங்கே போனதென்று தெரியவில்லை. இது ஒரு மிகப் பெரிய முறைகேடாகும். மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. முந்தைய அரசாங்கம் மக்களின் நம்பிக்கையைச் செயல்படுத்தவில்லை. அந்தப் பணம் அவர்களுக்கு வேண்டிய சிலரால் சூறையாடப்பட்டிருக்கலாம்” என்றும் குவான் எங் சாடியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

ஜிஎஸ்டி வரியைக் கூடுதலாகச் செலுத்திய வணிகர்கள் கடந்த ஏப்ரல் 2015 முதல் அதைத் திரும்பக் கொடுக்கும்படி நிதி அமைச்சைக் கேட்டு வந்தாலும் இன்னும் அந்தப் பணம் அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. தற்போதைய அரசாங்கத்திற்கோ அந்தப் பணத்தைத் திரும்பச் செலுத்துவதற்காக நிதிக் கையிருப்பு இல்லை என்றும் குவான் எங் கூறியிருக்கிறார்.

“நிதி அமைச்சின் தலைமைச் செயலாளர்தான் அதிகாரம் படைத்தவர் என்பதோடு எல்லா ஆவணங்களையும் அங்கீகரித்துக் கையெழுத்திட்டவர். அவர் தனக்குத் தெரியாது என்று எப்படிக் கூற முடியும்?” என்றும் குவான் எங் கேள்வி எழுப்பினார்.