
சென்னை – நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தனது முதல் படம் வெளியீடு காண்பதற்கு முன்பாகவே, சில தவறான காரணங்களுக்காக இன்று ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகியிருக்கிறார். சில நண்பர்களுடன் அவர் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்ததில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆட்டோ ரிக்ஷாக்கள் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மோதியதில் அந்த ஆட்டோ ரிக்ஷாக்கள் சேதமடைந்ததோடு, அதன் ஓட்டுநர்களும் காயங்களுக்கு உள்ளாகினர்.
இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் துருவ் மீது வழக்குகளைப் பதிவு செய்து பின்னர் பிணையில் (ஜாமீன்) அவரை விடுவித்துள்ளனர்.
தனது மகன் சம்பந்தப்பட்ட இந்த விபத்து குறித்து இன்று விக்ரம் விடுத்துள்ள அறிக்கையில், தனது மகன் அவனது நண்பனைச் சந்தித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், பாதிக்கப்பட்டவர்கள் தற்போது மருத்துவமனை சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பியிருப்பதாகவும் தெரிவித்தார், இந்த விபத்து கவனக் குறைவால் ஏற்பட்டது என்றும் விக்ரம் தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி படத்தை தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் பாலா இயக்கி வருகிறார். இதில் துருவ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதுவே இவரது முதல் படமும் ஆகும்.