புத்ரா ஜெயா – 60 வயதுக்கு மேற்பட்டு சிவப்பு அடையாள அட்டை வைத்திருக்கும் மலேசியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என இன்று செவ்வாய்க்கிழமை பிரதமர் துன் மகாதீர் அறிவித்ததைத் தொடர்ந்து நீண்ட காலமாக இந்திய சமுதாயம் போராடி வந்த ஒரு பிரச்சனைக்கு முக்கியத் தீர்வு காணப்பட்டுள்ளது.
சிவப்பு அடையாள அட்டைப் பிரச்சனையில் இதனால் முழுமையான முடிவு ஏற்பட்டு விடாது என்றாலும், ஒரு முக்கியப் பிரிவினரின் – 60 வயதைத் தாண்டியும் இந்நாட்டின் குடியுரிமை பெற முடியாமல் தவிக்கும் பிரிவினரின் – பிரச்சனைக்கு ஒரு தீர்வு மிக எளிமையாக – நேரடி – முறையில் காணப்பட்டுள்ளது.
இதன் மூலம் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி இந்திய சமுதாயத்திற்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
சில நியாயமான நிபந்தனைகள்
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சில நிபந்தனைகளுடன் குடியுரிமை வழங்கப்படும் என்றாலும், அந்த நிபந்தனைகளும் நியாயமானதாகவே படுகின்றது. அந்த நிபந்தனைகளில் சில:
- விண்ணப்பதாரர்கள் மலேசியாவில் பிறந்திருக்க வேண்டும்
- விண்ணப்பதாரரின் தாய் அல்லது தந்தையரில் ஒருவர் மலேசியக் குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.
- கடந்த 12 ஆண்டுகளில் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் மலேசியாவில் தங்கியிருக்க வேண்டும்.
- மலாய் மொழியில் போதிய ஆற்றல் பெற்றிருக்க வேண்டும்.
நேற்று திங்கட்கிழமை பக்காத்தான் ஹரப்பான் இந்தியத் தலைவர்களுடன் மகாதீர் நடத்திய சந்திப்புக்குப் பின்னர், அதன் தொடர்பில் மகாதீர் இந்த முடிவை இன்று அறிவித்தார். இதன் மூலம் 3,407 சிவப்பு அடையாள அட்டை கொண்ட இந்தியர்கள் குடியுரிமை பெறுவர்.
14-வது பொதுத் தேர்தலின்போது இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை விவாதிக்க நேற்று மகாதீர் கூட்டிய இந்தியத் தலைவர்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன், பிரதமர் துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி, துணையமைச்சர் ஆர்.சிவராசா, பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி, அமைச்சர் சேவியர் ஜெயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகளில் ஒன்றுதான் இன்று பிரதமரே அறிவித்த 60 வயதுக்கும் மேற்பட்ட சிவப்பு அடையாள அட்டைக்காரர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்ற அறிவிப்பாகும்.
மலாய் மொழித் தேர்வைப் பொறுத்தவரை அது மிக எளிமையான ஒன்று எனக் குறிப்பிட்ட மகாதீர் அதன் காரணமாக அந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதும் மிக எளிது எனக் குறிப்பிட்டார்.
எனினும் இந்த விவகாரத்தில் நடைமுறை நிர்வாகப் பிரச்சனைகள் காரணமாக, முழுமையாக தீர்வு கிடைக்க சிறிது காலம் பிடிக்கும் என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.
நடைமுறைச் சிக்கல்கள் இருந்தாலும், இந்த விவகாரத்தில் சரியான தீர்வொன்றைக் கண்டிருப்பதன் மூலம், மகாதீர் அவரே குறிப்பிட்டது போல் – கடந்த காலத்தில் இந்திய சமுதாயம் குறித்து தான் செய்யாமல் விட்ட சில பணிகளை முடிக்கும் முயற்சியில் முதல் இனிப்புச் செய்தியை வழங்கியிருக்கிறார்.
-இரா.முத்தரசன்
படங்கள்: நன்றி – எம்.குலசேகரன் முகநூல் பக்கம்