Home கலை உலகம் உள்ளூர் கலைஞர்களுக்கான மின்னல் பண்பலையின் “இசை.my”- கோபிந்த் சிங் தொடக்கி வைத்தார்

உள்ளூர் கலைஞர்களுக்கான மின்னல் பண்பலையின் “இசை.my”- கோபிந்த் சிங் தொடக்கி வைத்தார்

1179
0
SHARE
Ad
இசை.my நிகழ்ச்சியைத் தொடக்கிய கோபிந்த் சிங் டியோவுக்கு நினைவுப் பரிசு

கோலாலம்பூர் – 1946 முதல் செயல்பட்டு வரும் மின்னல் பண்பலை கடந்த 72 ஆண்டுகளில் பல்வேறு உருமாற்றங்களையும், நேர மாற்றங்களையும், பெயர் மாற்றங்களையும் கண்டு வந்துள்ளது. தற்போது மின்னல் எஃப்.எம். அல்லது பண்பலை என்ற பெயரில் செயல்படும் மலேசிய வானொலியின் தமிழ்ப் பிரிவு, உள்ளூர்க் கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்குவது என்ற ஓர் அம்சத்தில் மட்டும் தொடர்ந்து ஒரே நிலைப்பாட்டைக் கொண்டு ஏராளமான கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து வந்துள்ளது. அன்று தொட்டு இன்றுவரை மின்னல் பண்பலை மூலம் பிரபலமான – கலைத்துறையில் வெற்றிகரமாக உலா வரும் – கலைஞர்கள் அநேகம்.

இந்தப் பணியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் திட்டமாக ‘இசை.my’ என்ற நிகழ்ச்சியை மின்னல் அறிமுகப்படுத்துகிறது. நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் அறிமுக விழாவில் தொடர்பு மற்றும் பல்ஊடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அமைச்சர் என்ற முறையில் விஸ்மா ரேடியோவில் அவர் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சியாகவும், மின்னல் பண்பலைக்காக அவர் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சியாகவும் நேற்றைய ‘இசை.my’ நிகழ்ச்சி அமைந்தது.

மேடையில் மின்னல் வானொலி ஒலிபரப்பாளர்கள், பணியாளர்கள்
#TamilSchoolmychoice

இந்த தொடக்க நிகழ்ச்சியின் உள்ளூர் கலைஞர்களின் நடனம், பாடல், மாயவித்தை நிகழ்ச்சி போன்றவையும் இடம் பெற்றன.

‘கலப்படம்’ நிகழ்ச்சியின் உருமாற்றம்

மின்னல் பண்பலையின் நீண்டகால நேயர்கள் ‘கலப்படம்’ என்ற நிகழ்ச்சியை அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். பல உள்ளூர் நகைச்சுவைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்கள், கலைஞர்கள் எனப் பலரும் பங்கு பெற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். அந்த கலப்படம் நிகழ்ச்சியின் உருமாற்றமாகத்தான் இந்த புதிய ‘‘இசை.my’ என்ற நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க உள்ளூர்க் கலைஞர்களே இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவர். அதுமட்டுமின்றி அவர்கள் பாடும் பாடல்களும் முழுக்க முழுக்க உள்ளூர் பாடல்களாகவே இருக்கும். உள்ளூர் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவும் அவர்களைப் பிரபலப்படுத்தவும் அதன் மூலம் மலேசிய இந்தியர்களின் கலைத் திறமைகளை வெளியுலகுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சி இதுவாகும்.

அமைச்சருடன் வானொலிக் கலைஞர்கள்

இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள், இசைக் கலைஞர்கள் என அனைவருமே உள்ளூர் கலைஞர்களாக இருப்பர் என்பதால் இது நூறு விழுக்காடு நமது கலைஞர்களைப் பெருமைப்படுத்தும் நிகழ்ச்சியாக அமையும்.

மூத்த, பழம் பெரும் கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கும் அதே நேரத்தில், புதிய கலைஞர்களையும் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியாகவும் இது அமையவிருப்பதால் அனைத்துத் தரப்பினரையும் இது மகிழ்விக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்டிஎம் துணை இயக்குநர் அப்துல் முயிஸ் பின் ஷெபியி, கோபிந்த் சிங், மின்னல் பண்பலை தலைவர் குமரன்

எதிர்வரும் 2 செப்டம்பர் 2018 தொடங்கி ஒலியேறவிருக்கும் இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 11.30 மணிக்கு மின்னல் பண்பலையில் ஒலிபரப்பாகும். தொடர்ந்து மின்னலில் யூடியூப் அகப் பக்கத்திலும் இந்த நிகழ்ச்சி பதிவேற்றம் காணும்.