Home நாடு மறைந்த ஜமாலுடின் ஜார்ஜிஸ் சொத்துகள் மதிப்பு 2.1 பில்லியன் ரிங்கிட்

மறைந்த ஜமாலுடின் ஜார்ஜிஸ் சொத்துகள் மதிப்பு 2.1 பில்லியன் ரிங்கிட்

933
0
SHARE
Ad

ஆகஸ்ட் 31 – கடந்த 4 ஏப்ரல் 2015-ஆம் நாள் ஹெலிகாப்டர் விபத்தொன்றில் காலமான மறைந்த முன்னாள் அமைச்சர் ஜமாலுடின் ஜார்ஜிஸ் (படம்) சுமார் 2.1 பில்லியன் ரிங்கிட் மதிப்புடைய சொத்துகளைக் கொண்டிருந்தார் என்பது அவர் மரணமடைந்து சில ஆண்டுகளுக்குப் பின் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஜமாலுடின் ஜார்ஜிஸ் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் நெருங்கிய அரசியல் சகாவாகவும், அமைச்சராகவும், பின்னர் அமெரிக்காவுக்கான மலேசியத் தூதராகவும் பதவி வகித்தவர். பகாங் மாநிலத்தின் ரொம்பின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தார்.

தற்போது அவரது 83-வயது தாயார் – அமினா அப்துல்லா – தனது மகனின் சொத்துகளில் தனக்கும் ஒரு பங்கு வழங்கப்பட வேண்டும் என ஷாரியா நீதிமன்றத்தில் வழக்கொன்றைப் பதிவு செய்திருக்கிறார். அந்த வழக்கில் ஜமாலுடினின் சொத்துகளையும் பட்டியலிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

ஷாரியா எனப்படும் இஸ்லாமியச் சட்டங்களின்படி ஒருவர் உயில் எதுவும் இல்லாமல் மரணமடைந்தால், அவரது பெற்றோருக்கு அந்த சொத்துகளில் ஆறில் ஒரு பங்கைப் பெற உரிமையிருக்கிறது. இறந்தவரின் மனைவி எட்டில் ஒரு பங்கு சொத்தையும், பிள்ளைகள் எஞ்சியவற்றைப் பெறுவதற்கும் இந்த சட்டங்கள் உரிமைகள் வழங்குகின்றன.

அதன்படி, ஜமாலுடின் ஜார்ஜிசின் சொத்துகளின் மதிப்பு 2.1 பில்லியன் ரிங்கிட் என்பது அவரது தாயாரின் வழக்கின் மூலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றது. அமைச்சராகவும், தூதராகவும் இருந்த ஒருவர் எப்படி இவ்வளவு சொத்துகளைத் தன் வாழ்நாளில் சேர்க்க முடிந்தது என்ற கேள்விகளும் தற்போது சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்டு வருகிறன.

ஜமாலுடின் பெயரில் உள்நாட்டிலும், சவுதி அரேபியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இல்லங்களும், பல நிறுவனங்களில் பங்குகளும் இருக்கின்றன. மொத்தம் 22 நில, வீட்டுச் சொத்துகளைக் கொண்டிருந்த அவர் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 21 வங்கிக் கணக்குகளைக் கொண்டிருந்ததாகவும், அந்தக் கணக்குகளின் மூலம் சுமார் 15 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட ரொக்கத்தை வைத்திருந்ததாகவும் இந்த ஷாரியா நீதிமன்ற வழக்கின் மூலம் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்த வழக்கு விசாரணை அடுத்து செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெற நீதிமன்றம் தேதியை நிர்ணயித்திருக்கின்றது. மலேசியாவின் ஷாரியா நீதிமன்ற வரலாற்றில் இத்தகைய பெரிய அளவிலான சொத்துத் தகராற்றைக் கொண்ட வழக்குகளில் ஒன்றாக இந்த வழக்கு கருதப்படுகிறது.