கோலாலம்பூர், ஏப்ரல் 7 – பிரதமர் நஜிப்புக்கு இது சோதனை காலம் போலும்! அடுக்கடுக்கான சவால்களையும், பிரச்சனைகளையும் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கின்றார் அவர்.
ஹெலிகாப்டர் விபத்தில் பலியான டான்ஸ்ரீ ஜமாலுடின் ஜார்ஜிசின் மறைவும் நஜிப்பின் நெருங்கிய அரசியல் வட்டாரத்தில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. காரணம், நஜிப்புக்குப் பின்னணியில் இருந்து செயல்பட்ட முக்கிய கரங்களில் ஒன்றாகத் திகழ்ந்தவர் ஜமாலுடின்.
விரிவுரையாளராக வாழ்க்கைத் தொடக்கம்
அவரது நட்பு வட்டாரத்தில் ‘ஜெ ஜெ’ (JJ) என்று அழைக்கப்பட்ட ஜமாலுடின் பகாங் மாநிலத்தைச் சேர்ந்தவர். நஜிப்பே தெரிவித்திருப்பதைப் போல் பல்கலைக் கழக மாணவப் பருவம் முதல் இருவருக்கும் பழக்கம்.
தொடக்கத்தில் மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக தமது பணியைத் தொடங்கிய ஜமாலுடின், பின்னர் தனது நண்பரான நஜிப்புக்கு கைகொடுக்க, அரசியல்வாதியாகவும் அரசுப் பிரதிநிதியாகவும் உருவெடுத்தார்.
கடந்த 1990ல் முதன்முதலாக பகாங், ரொம்பின் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக தேர்வு பெற்ற அவர், மத்திய அமைச்சரவையில் மூன்று முக்கிய பொறுப்புகளை கடந்த காலங்களில் ஏற்றிருந்தார்.
இரண்டாவது நிதியமைச்சர் (2002-2004), உள்ளூர் வாணிபம் மற்றும் பயனீட்டாளர் விவகாரங்கள் (ஜனவரி – மார்ச், 2004), அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துறை ஆகியவற்றுக்கு அவர் பொறுப்பேற்றிருந்தார்.
கனடா பல்கலைக்கழகங்களில் பட்ட மேற்படிப்பும், பிஎச்டி (முனைவர்) ஆய்வுப் படிப்பையும் முடித்துள்ளார் ஜமாலுடின் ஜார்ஜிஸ். சிறந்த கல்வித் தகுதிகளைக் கொண்டிருந்தவர்.
தெனகா நேசனல் பெர்ஹார்ட் எனப்படும் தேசிய மின்சார வாரியத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்துள்ள அவர், நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவிற்கும் தலைமை ஏற்றுள்ளார்.
நான்கு குழந்தைகளின் தந்தையான ஜமாலுடின் வகித்த பதவிகளில் மிக உயர்ந்ததும், முக்கியமானதும் என்றால், அது கடந்த 2009 முதல் 2011 வரை அமெரிக்காவுக்கான மலேசியத் தூதராக பணியாற்றியது தான்.
அன்வாரை அமெரிக்காவில் சமாளிக்க அனுப்பப்பட்டவர்
2008ஆம் ஆண்டில் தேசிய முன்னணிக்கு பொதுத் தேர்தலில் ஏற்பட்ட வீழ்ச்சி – அதே காலகட்டத்தில் சிறையிலிருந்து வெளிவந்திருந்த அன்வார் இப்ராகிமின் அரசியல் ஆதரவு எழுச்சி – இரண்டும் இணைந்து அமெரிக்க வட்டாரங்களிலும் எதிரொலித்தன.
அமெரிக்க வட்டாரங்களில் அன்வாரின் தொடர்புகளும், அரசியல் நெருக்கங்களும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அந்த காலகட்டத்தில் வணிகத்திலும், அரசியலிலும் மலேசியாவுக்கு முக்கிய பங்காளியாக விளங்கிய அமெரிக்காவில், ஒரு சாதாரண மலேசியத் தூதரைவிட, தனக்கு நெருக்கமான, உள்நாட்டு அரசியலை நன்கு புரிந்திருந்த ஓர் அரசியல் சகாவை தூதராக நியமிக்க வேண்டிய கட்டாயமும், வியூகமும் நஜிப்புக்கு தேவைப்பட்டது.
அதற்குப் பொருத்தமானவராக ஜமாலுடின் விளங்கினார். இங்கே அமைச்சராக இருப்பதை விட அவர் அமெரிக்காவில் தூதராக இருப்பதன் மூலம், அன்வாரின் செல்வாக்கை அமெரிக்காவில் கட்டுப்படுத்தவும், மட்டுப்படுத்தவும் முடியும் என்ற நோக்கில், ஜமாலுடின் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டார். இருப்பினும், ரொம்பின் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகவும் தனது பொறுப்புகளைத் தொடர்ந்தார்.
இதிலிருந்தே, அவர் நஜிப்புக்கு எவ்வளவு நெருக்கமானவராக, நம்பிக்கையானவராக விளங்கினார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
ஜமாலுடினின் தனிப்பட்ட குணங்கள்
மிக நட்பானவராக, எளிமையானவராக, எளிதில் அணுகக்கூடியவராக ஜமாலுடின் விளங்கியதாக அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தன்னுடன் பணியாற்றியவர்களுக்கு அவர் நல்ல ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட வந்தபோது நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜமாலுடினை இழந்த தனது சோகத்தை வெளிப்படுத்தும் நஜிப்
“ஒரு தந்தையைப் போன்றும், நல்ல ஆசிரியராகவும் அவர் எனக்கு விளங்கினார். எனக்கு நல்ல முறையில் பயிற்சி அளித்தார். கடைசியாக கடந்த வியாழக்கிழமை அவரைப் பார்த்தேன். அப்போது தனக்கே உரிய உற்சாகத்துடன் காணப்பட்டார்,” என்கிறார் ஜமாலுடினிடம் சுமார் 16 மாதங்கள் தனிச்செயலராகப் பணியாற்றிய சயாமில் சாயிட்.
அமெரிக்கத் தூதர் பணியை வெற்றிகரமாக முடித்த பின்னர் இங்கே, பின்னணியில் நஜிப்புக்கு பல வகைகளிலும் துணை நிற்பவராக, தோள் கொடுப்பவராக செயலாற்றிக் கொண்டிருந்தவர் ஜமாலுடின்.
நஜிப்பின் தலைமைத்துவத்தை வீழ்த்த வகுக்கப்பட்டிருக்கும் வியூகம் – நஜிப்புக்கு எதிரான மகாதீரின் தாக்குதல் – அல்தான்துயா விவகாரம் – 1எம்டிபி சர்ச்சைகள் – இப்படியாக நஜிப்பை அரசியலில் மூழ்கடிக்க பல விவகாரங்கள் விஸ்வரூபம் எடுத்து நிற்கையில், அரசியல் ரீதியாக ஜமாலுடின் அம்னோ வட்டாரங்களில் பின்னணியில் இருந்து பல முக்கிய காரியங்களை ஆற்றுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
ஆனால், அவரது வெற்றிடத்தைத் தற்போது நிரப்புவது என்பது நஜிப்பால் முடியாத ஒன்று.
அதைவிட முக்கியமாக, ஜமாலுடின் மறைவால் நடைபெறப்போகும் ரொம்பின் இடைத் தேர்தலில் வென்று காட்ட வேண்டிய கட்டாயமும் அதனால் பகாங் மாநிலத்தில் தனது ஆதரவு இன்னும் குறையவில்லை என்பதைக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தமும் நஜிப்புக்கு ஏற்பட்டிருக்கின்றது.
ஆனால், இடைத் தேர்தலில் அம்னோவுக்கும் நஜிப்புக்கும் பிரச்சனைகள் இருக்க வாய்ப்பில்லை. காரணம், கடந்த பொதுத் தேர்தலில் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் ரொம்பின் தொகுதியில் வென்றவர் ஜமாலுடின். இந்த முறை யாரை நிறுத்தினாலும், ஜமாலுடின் மரணத்தால் வீசுகின்ற அனுதாப அலையால் அம்னோவும்-தேசிய முன்னணியும் அங்கு வெல்வது உறுதி.
ஆனால், நெருக்கமான ஓர் அரசியல் சகா என்ற முறையில் ஜமாலுடினின் மறைவால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடம்தான் நஜிப்பால் ஈடு செய்ய முடியாத ஒரு பெரிய இழப்பாகும்
-இரா.முத்தரசன்