Home உலகம் மியன்மாரில் ராய்ட்டர் நிருபர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை

மியன்மாரில் ராய்ட்டர் நிருபர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை

1022
0
SHARE
Ad

யாங்கூன் – மியன்மாரில் ரோஹிங்கியா அகதிகள் குறித்த படுகொலைகள் குறித்து ஆராய்ந்து எழுதிய ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் நிருபர்கள் இருவருக்கு மியன்மார் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியிருப்பது உலகம் முழுவதிலும் கடும் கண்டனங்களைத் தோற்றுவித்திருக்கிறது.

வா லோன் (32 வயது), கியாவ் சோ ஊ (வயது 28) ஆகிய இருவரும் அரசாங்கத்தின் அதிகாரத்துவ இரகசியக் காப்புச் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக டிசம்பர் 2017-இல் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் மியன்மார் குடிமக்களாவர்.

ராகின்யா மாநிலத்தில் ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட படுகொலைகளை இந்த இரண்டு நிருபர்களும் விசாரித்து எழுதியிருந்தனர்.

#TamilSchoolmychoice

மியன்மாரில் நோபல் பரிசு பெற்ற ஆங் சூ கியின் தலைமையில் நடைபெறும் ஆட்சியில் இத்தகைய ஊடகங்களுக்கு எதிரான அத்துமீறல்கள் நடைபெற்றிருப்பதால், அவருக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை மீட்டுக் கொள்ள வேண்டும் என பல அனைத்துலக அமைப்புகள் கோரிக்கை விடுத்திருக்கின்றன.

எனினும் ஆங் சூ கியிடம் வழங்கப்பட்ட நோபல் பரிசை திரும்பப் பெறமாட்டோம் என நோபல் பரிசுக் குழுவினர் அறிவித்து விட்டனர்.

அன்று ஆங் சூ கி மியன்மாரில் நடைபெற்ற அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடியபோது, உலகம் முழுவதும் அவருக்கு ஆதரவான அறைகூவல்களும் ஊடகங்கள் வாயிலான ஆதரவுக் குரல்களும் எழுந்தன.

ஆனால் இன்று அவரது ஆட்சியிலேயே பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பது, ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.