Home இந்தியா விமானத்தில் தமிழிசையைத் திட்டிய சோபியா மீது வழக்கு

விமானத்தில் தமிழிசையைத் திட்டிய சோபியா மீது வழக்கு

934
0
SHARE
Ad

தூத்துக்குடி – நேற்று திங்கட்கிழமை தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்ற தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனை நோக்கி விமானத்திற்குள் முழக்கங்கள் எழுப்பி திட்டிய சோபியா பெலிக்ஸ் என்ற பெண் மீது மூன்று பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

தமிழிசை அந்தப் பெண்மீது காவல் துறையில் புகார் கூறியதை அடுத்து காவல் துறையினர் அந்தப் பெண்ணைக் கைது செய்தனர். நீதிமன்றம் சோபியாவை 15 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இருப்பினும் இன்று வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது சோபியாவுக்கு நீதிமன்றம் பிணை (ஜாமின்) வழங்கியது. அவரும் தடுப்புக் காவலில் இருந்து வெளியே வந்தார்.

இதனைத் தொடர்ந்து சோபியா பொது இடத்தில் தலைவர் ஒருவரைத் திட்டியது சரியா? இது கருத்துச் சுதந்திரமா அல்லது அத்து மீறலா? என்பது போன்ற வாதப் பிரதிவாதங்கள் தமிழகத்தில் எழுந்துள்ளன.

கமல்ஹாசன் சோபியாவுக்கு ஆதரவு

#TamilSchoolmychoice

“பொது இடங்களில் குரல் எழுப்புவதும்,விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப் படவேண்டிய குற்றவாளிகளே. சுதந்திரப்பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம்.அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்?
நானும் அரசியல்வாதிதான் என்பதை உணர்ந்தே சொல்கிறேன்.” என சோபியாவுக்கு ஆதரவாக கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

மு.க.ஸ்டாலின், சீமான் போன்ற எனப் பல தலைவர்களும் சோபியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். சோபியா வெளிநாட்டில் படித்து வரும் மாணவியாவார். இவருக்கு ஆதரவாக பலரும் சமூக ஊடகங்களில் குரல் எழுப்பி வருகின்றனர்.