பெய்ஜிங் – அலிபாபா நிறுவனத்தின் இணைத் தோற்றுநர் ஜேக் மா அந்நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து அடுத்த ஒரு வருடத்திற்குள் விலகுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்குப் பதிலாக அலிபாபா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டேனியல் சாங் (Daniel Zhang) பொறுப்புகளை ஏற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
54 வயதான ஜேக் மா 1999-ஆம் ஆண்டில் இணைத் தோற்றுநராக அலிபாபா நிறுவனத்தை உருவாக்கினார். மிகப் பெரிய வளர்ச்சியைப் பெற்ற இந்நிறுவனம் கடந்த ஆண்டில் மட்டும் 39.9 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்தைப் பதிவு செய்தது.
இருப்பினும் ஜேக் மா தொடர்ந்து அலிபாபா நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபாடு காட்டி வருவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் துறைக்குத் திரும்ப தான் ஆர்வம் கொண்டிருப்பதாகவும் ஜேக் மா தெரிவித்துள்ளார். வணிகத்தில் ஈடுபடுவதற்கு முன்னால் ஜேக் மா ஆங்கில மொழி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
“எனக்கும் இன்னும் துரத்துவதற்கு கனவுகள் நிறைய இருக்கின்றன” என்றும் தனது பதவி துறப்பு தொடர்பில் அவர் வெளியிட்ட பகிரங்க கடிதத்தில் ஜேக் மா குறிப்பிட்டிருக்கிறார்.
1999 செப்டம்பர் 10-ஆம் தேதி தொடங்கப்பட்ட அலிபாபா நிறுவனம் எதிர்வரும் 2019-ஆம் ஆண்டு அதே தேதியில் தனது 20-ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் தருணத்தில் ஜேக் மாவும் தனது பொறுப்புகளைத் துறப்பார்.
அலிபாபா நிறுவனம் தற்போது 420 பில்லியன் டாலர் மதிப்பைக் கொண்டுள்ளது.