Home நாடு தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு இலவச தேர்வு வழிகாட்டி – ஆட்சிக் குழு உறுப்பினர் சண்முகம் வழங்கினார்!

தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு இலவச தேர்வு வழிகாட்டி – ஆட்சிக் குழு உறுப்பினர் சண்முகம் வழங்கினார்!

1379
0
SHARE
Ad

சுங்கைப்பட்டாணி – இந்த மாதம் நடைபெறவிருக்கும் யுபிஎஸ்ஆர் தேர்வுகளில் கெடா மாநில  தமிழ்ப் பள்ளி மாணவர்கள் சிறந்த முறையில் தேர்ச்சி பெற வேண்டும், தமிழ்ப் பள்ளிகளின் பெருமையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கங்களோடு, கெடா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஆர்.சண்முகம் யுபிஎஸ்ஆர் தமிழ்மொழி பாடத்திற்கான தேர்வு வழிகாட்டி நூல்களை கெடா மாநிலத்திலுள்ள அனைத்து யுபிஎஸ்ஆர் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கியுள்ளார்.

வி ஷைன் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த நூல்கள் கெடா மாநிலத்தின் அனைத்துத் தமிழ்ப் பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நூல்கள் வழங்கப்பட்டதற்கான அடையாள நிகழ்ச்சி அண்மையில் (ஆகஸ்ட் 30) கெடா மாநில தமிழ்ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் முன்னிலையில் சுங்கைப்பட்டாணி யுபி ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப் பள்ளியில் நடைபெற்றது.

கெடா மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கான அமைப்பாளர் கருணாமூர்த்தி, கெடா மாநில கல்வி அமைச்சின் துணை இயக்குநர் தமிழ் செல்வம் ஆகியோரும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் கெடா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சண்முகம் சிறப்புரையாற்றினார்.

#TamilSchoolmychoice

தனதுரையில், “இந்த நூல்கள் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பின்னணியில் இருந்து செய்து ஒத்துழைப்பு கொடுத்தது தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தின் முதன்மை தலைமைச் செயல் அதிகாரி டத்தோ சகாதேவன்தான். நீண்ட கால நட்பும் தொழில் பழக்கமும் எங்களுக்கு இடையில் இருக்கிறது. இந்த வேளையில் இந்த நூல்கள் வழங்கும் நடவடிக்கை சிறப்பாக நடந்தேற உதவி புரிந்த அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று சண்முகம் கூறினார்.

“அனைத்துத் தரப்பு இந்தியர்களுக்கும் பாடுபடுவேன்”

“கெடா மாநிலத்திலுள்ள அனைத்துத் தரப்பு இந்தியர்களுக்கும் கட்சி, அரசியல் பேதமின்றி தான் பாடுபடப் போகிறேன். காரணம், எங்களின் கட்சியை விட மஇகாவில்தான் எனக்கு அதிகமான நண்பர்கள் இருக்கிறார்கள். எனவே, கெடா மாநில இந்தியர்களின் நலன்கள், கல்வி, பொருளாதார, சமூகப் பிரச்சனைகள் என்று வரும்போது நான் யார் எந்தக் கட்சி என்றெல்லாம் பார்க்கப் போவதில்லை. மக்கள் சேவை ஒன்றேதான் எனது குறிக்கோளாக இருக்கும். எனவே எல்லாத் தரப்பினரும் என்னை தாராளமாக அணுகலாம்” என்றும் சண்முகம் தொடர்ந்து கூறினார்.

கல்வி அமைச்சின் உதவி இயக்குநர் தமிழ் செல்வம், ஆறுமுகம் பிள்ளை தோட்டத் தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர் அன்பழகன் ஆகியோருடன் சண்முகம்

தமிழ்ப் பள்ளிகளுக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்களுக்கு தமிழ்ப் பள்ளி நிர்வாகத்தின் மீது அதிக அக்கறையும் இருப்பதால், இப்போதெல்லாம் அவர்கள் நிறைய கேள்வி எழுப்புகிறார்கள் என்றும் புதிய மலேசியாவின் புதிய அரசாங்கத்தில் இதுபோன்று மக்கள் கேள்வி எழுப்புவது சகஜம் என்றும் கூறிய சண்முகம், எனவே, பள்ளித் தலைமையாசிரியர்கள் தமிழ்ப்பள்ளிகளின் நிர்வாகத்தை முறையாகக் கண்காணித்து வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஆட்சிக் குழு உறுப்பினராகப் பதவியேற்றது முதல் தமிழ்க் கல்வி, தமிழ்ப் பள்ளிகள் ஆகியவற்றுக்காகத் தாம் தொடர்ந்து பாடுபட்டு வந்துள்ளதாகவும், இனியும் தொடர்ந்து பாடுபடப் போவதாகவும் சண்முகம் கூறினார். இதன் தொடர்பில் பல பள்ளிகளுக்கு வருகை தந்து பிரச்சனைகளைக் கேட்டறிந்திருப்பதாகவும், விரைவில் அவற்றுக்கெல்லாம் தீர்வுகள் காணும் முயற்சியில் ஈடுபடப் போவதாகவும் சண்முகம் கூறினார்.

எனவே, இதன் தொடர்பில் தமிழ்ப் பள்ளிகளுக்கு அடிக்கடி வருகை தந்து நிலைமைகளைப் பார்வையிடப் போவதாகவும் உறுதியளித்த சண்முகம், தான் வருகை தரும்போது தனக்கென சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தலைமையாசிரியர்களுக்கு யுபிஎஸ்ஆர் தமிழ் மொழி நூல்களை வழங்கியதோடு, யுபி ஆறுமுகம் பிள்ளை தோட்டத் தமிழ்ப் பள்ளி மாணவர்களும் சண்முகத்திடம் இருந்து நேரடியாக நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர், ஆறுமுகம் பிள்ளை தோட்டத் தமிழ்ப் பள்ளியின் பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க பள்ளியைச் சுற்றிப் பார்த்து அந்தப் பள்ளி எதிர்நோக்கும் கட்டுமானப் பிரச்சனைகளையும் மற்ற பிரச்சனைகளையும் சண்முகம் கேட்டறிந்தார்.