Home வணிகம்/தொழில் நுட்பம் ஆப்பிள் புதிய ஐபோன் – புதிய சாதனங்கள் – வெளியீடு காண்கின்றன

ஆப்பிள் புதிய ஐபோன் – புதிய சாதனங்கள் – வெளியீடு காண்கின்றன

1480
0
SHARE
Ad

குப்பர்ட்டினோ – ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது நட்சத்திரத் தயாரிப்பான ஐபோன் செல்பேசியில் பல புதிய நவீன அம்சங்களை அறிமுகப்படுத்துவதுடன், மேலும் சில புதிய சாதனங்களையும் அறிமுகப்படுத்தும். உலகம் முழுவதும் இந்த அறிமுக நிகழ்ச்சி நேரலையாக ஐபோன்களின் ஆப்ஸ்டோர் குறுஞ்செயலி வழியும், இணையத் தளங்களின் வழியும் ஒளிபரப்பாகும்.

நாளை புதன்கிழமை ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள குப்பர்ட்டினோ நகரில் உள்ள ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் பெயரில் அமைந்திருக்கும் உள்அரங்கில் இந்த அறிமுக நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

ஆப்பிள் நிறுவனம் அண்மையில் தனது பங்கு மதிப்பை அடிப்படையாகக் கொண்டு 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பைக் கொண்ட நிறுவனமாக அறிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

ஆகக் கடைசியாக கடந்த ஆண்டு வெளியான ஐபோன் எக்ஸ் (iPhone X) சாதனத்தில் பல புதிய அம்சங்கள் புகுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன்களின் திரைகளின் அளவு அதிகரிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஐபோன், ஐபோன் எக்ஸ்-எஸ் (iPhone XS) என்ற பெயரில் அழைக்கப்படும் என்ற தகவல்களும் கசிந்துள்ளன. அதன் ஆற்றல் முன்பை விட அதிவிரைவாக செயல்படும் வகையில் மேம்படுத்தப்பட்டு, அதன் புகைப்படம் எடுக்கும் ஆற்றலும் அதிகரிக்கப்படும்.

புதிய ஐபோன்களின் திரையளவு 6.8 அங்குல இருக்கும் வண்ணம் ‘எக்ஸ்-எஸ் மேக்ஸ்’ (iPhone XS Max) என்ற புதிய பெயர் வரிசை செல்பேசிகள் நாளை அறிமுகம் காணும் என்பது இன்னொரு ஆரூடம். ‘பிளஸ்’ (Plus) என்ற பெயர் வரிசை இனி பயன்படுத்தப்படாது என்ற ஆரூடமும் வெளியாகியிருக்கிறது.

ஐபோன் எக்ஸ் செல்பேசிகளின் நவீன அம்சங்களில் சிலவற்றை மலிவு விலை ஐபோன்களிலும் புகுத்தப்படும் வண்ணம் வடிவமைப்புகள் செய்யப்பட்டு, புதிய வண்ணங்களில் அறிமுகம் காணவிருக்கின்றன.

ஆப்பிள் கைக்கெடிகாரம்

ஆப்பிள் கைக்கெடிகாரங்கள் அறிமுகம் கண்டு 3 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இந்த சாதனங்களிலும் சில மாற்றங்கள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன்களுக்கு மின்ஆற்றல் ஊட்டும் (பேட்டரி) சாதனங்களும் புதிய வகையில் அறிமுகம் காணும்.

ஏர்போட் (Air Pods) என அழைக்கப்படும் ஐபோன்களுக்கான ஒலிப்பேழைகளும் (கம்பி இணைப்பின்றி காதுகளில் வைத்துக் கேட்க உதவும் கருவி) நாளைய நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஐபோன்களுக்கான புதிய மேம்படுத்தப்பட்ட மென்பொருள் ஐஓஎஸ் 12 வெளியிடப்படும். அடுத்த சில நாட்களில் இந்த புதிய மென்பொருளை பயனர்கள் தங்களின் ஐபோன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

தரம் உயர்த்தப்பட்ட, ஐபேட் புரோ எனப்படும் நவீன அம்சங்களுடன் கூடிய கையடக்கக் கருவியும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியிடப்பட்ட ஆரூடங்களையும் மீறி, மேலும் சில புதிய எதிர்பாராத ஆச்சரியங்களும் நாளைய ஆப்பிள் அறிமுக நிகழ்ச்சியில் இடம் பெறலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.