Home நாடு தமிழ் இடைநிலைப் பள்ளி – பக்காத்தானின் இன்னொரு வெற்று வாக்குறுதியாகி விடுமா?

தமிழ் இடைநிலைப் பள்ளி – பக்காத்தானின் இன்னொரு வெற்று வாக்குறுதியாகி விடுமா?

2163
0
SHARE
Ad
தமிழ் இடைநிலைப் பள்ளி அமைக்கப்படுமா – நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய ஆனந்தன்

கோலாலம்பூர் – 14-வது பொதுத் தேர்தலின்போது பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி இந்தியர்களுக்கென வெளியிட்ட சிறப்பு தேர்தல் அறிக்கையில், தமிழ் மொழி மீது பற்றும் பாசமும் கொண்ட வாக்காளர்களை ஈர்த்த வாக்குறுதிகளில் ஒன்று “தமிழ் இடைநிலைப் பள்ளி அமைக்கப்படும்” என்ற வாக்குறுதி. துன் மகாதீரும் பிரச்சார மேடையில் இந்த வாக்குறுதியை வழங்கியிருந்தார்.

அந்த வாக்குறுதி பக்காத்தான் கூட்டணியின் வெற்று வாக்குறுதிகளில் ஒன்றாக, இந்தியர்களுக்கு எட்டாத கனவாகவே இருந்து விடுமோ என்ற எண்ணமும் அச்சமும் தற்போது ஏற்பட்டுள்ளது. அதற்குக் காரணம் இந்த விவகாரம் குறித்த கல்வி அமைச்சரின் நழுவலான, மழுப்பலான பதில்!

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற மேலவையின் கூட்டத் தொடரில் கெடா மாநிலத்தைப் பிரதிநிதிக்கும் மஇகாவின் செனட்டர் டத்தோ எஸ்.ஆனந்தன் (படம்) கல்வி அமைச்சருக்கு கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார்.

#TamilSchoolmychoice

பக்காத்தான் கூட்டணி தேர்தல் வாக்குறுதியாக வழங்கிய தமிழ் இடைநிலைப் பள்ளி கட்டப்படுமா? என்ற கேள்விதான் அது!

அதற்குப் பதிலளித்த கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் (படம்), நாட்டின் கல்விச் சட்டத்தின் கீழ் அனைத்து இனங்களும் கல்வி பயிலும் வண்ணம் அரசாங்க இடைநிலைப் பள்ளி மட்டுமே அமைக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.

“தமிழ் இடைநிலைப் பள்ளி அமைக்கப்படுவதில், அதற்கான அத்தியாவசியம், மாணவர்களின் எண்ணிக்கை போதுமானதாக இருக்குமா, அத்தகைய பள்ளிகளின் தரம், அதனை அமைக்க சட்டம் இடம் தருமா, அரசாங்கத்தின் நிதி நிலைமை, போன்ற அம்சங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். எனினும் இந்திய மாணவர்கள் இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் மொழியை ஒரு பாடமாக படிப்பதற்கு கல்வி அமைச்சு தடையாக இருக்கவில்லை. இந்திய மாணவர்கள் தமிழ் மொழியை இடைநிலைப் பள்ளிகளில் ஒரு பாடமாக எடுத்துப் படிக்கலாம்” என்று மட்டும் கல்வி அமைச்சர் தனது பதிலில் கூறியிருக்கிறார்.

ஆனால், பக்காத்தான் கூட்டணியின் அந்தத் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படுமா – கல்வி அமைச்சு அதற்காக நடவடிக்கை எடுக்குமா – கல்விச் சட்டத்தில் இதற்கு இடையூறுகள் இருந்தால் அதற்காக சட்டத் திருத்தம் கொண்டுவரப் படுமா என்பது போன்ற கேள்விகளையெல்லாம் மஸ்லீ மாலிக் பட்டும் படாமல் தவிர்த்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து, தமிழ் இடைநிலைப் பள்ளி பக்காத்தான் ஆட்சியிலும் ஒரு கனவாகவே போய்விடுமோ – இன்னொரு வெற்று வாக்குறுதியாகி விடுமோ – என்ற அச்சமும் கவலையும் தமிழ் ஆர்வலர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

இந்தியர்களுக்கான தேர்தல் அறிக்கையில் தமிழ் இடைநிலைப் பள்ளி என்ற வாக்குறுதி இடம் பெற்றதோடு, பல தொகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரங்களில் முக்கிய முழக்கமாகவும், மூலைக்கு மூலை பதாகைகளாக வைக்கப்பட்ட வாக்குறுதியாகும் இது திகழ்ந்தது.

சீனப் பள்ளிகளுக்கு இடைநிலைப் பள்ளி இருக்கும் நிலையில் தமிழ்ப் பள்ளிகளுக்கும் இடைநிலைப் பள்ளி ஒன்று அமைக்கப்பட வேண்டும், அதன் மூலம் அத்தகைய பள்ளிகளில் பயிலும் வாய்ப்பு இந்தியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற முழக்கங்கள் இந்தியர்களின் வாக்குகள் பக்காத்தான் கூட்டணியை நோக்கித் திரும்ப முக்கிய காரணங்களாக அமைந்தன என்றால் அது மிகையாகாது.

தமிழ் இடைநிலைப் பள்ளிக்கான நிலத்தையும் ஒத்துழைப்பையும் வழங்க பினாங்கு மாநிலம் முன்வரும் என அம்மாநிலத்தின் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமியும், சிலாங்கூர் மாநில அரசாங்கமும் உறுதியளித்திருந்தார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

-இரா.முத்தரசன்