Home உலகம் கிளேர் ரியூகாசல் சிங்கையில் கைது செய்யப்பட்டு விடுதலை

கிளேர் ரியூகாசல் சிங்கையில் கைது செய்யப்பட்டு விடுதலை

1067
0
SHARE
Ad
சிங்கை விமான நிலையத்தில் கிளேர் பிரவுன் (சரவாக் ரிப்போர்ட் முகநூல் படம்)

சிங்கப்பூர் – 1எம்டிபி ஊழல் விவகாரங்கள் தொடர்பாக தொடர் போராட்டம் நடத்தி வந்த சரவாக் ரிப்போர்ட் ஊடக நிறுவனர் கிளேர் ரியூகாசல் பிரவுன் சனிக்கிழமை (15 செப்டம்பர்)  ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.00 மணியளவில் சிங்கப்பூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு அதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.

கடந்த வாரம் கிளேர் பிரவுன் 1எம்டிபி ஊழல் குறித்த புலனாய்வுகள் அடங்கிய நூல் ஒன்றையும் கோலாலம்பூரில் வெளியிட்டார். அந்த நூல் பரபரப்பாக விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.

அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் சென்ற அவர் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார். சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கிளேர் பிரவுனின் பெயர் சிங்கப்பூர் குடிநுழைவுத் துறையினரால் கறுப்புப் பட்டியலிடப்பட்டிருந்ததைத் தொடர்ந்து அவர் தடுத்து வைக்கப்பட்டார். ஆனால் அவரது பெயர் ஏன் கறுப்புப் பட்டியலிடப்பட்டது என்பது குறித்து சிங்கை அதிகாரிகளுக்கே குழப்பங்கள் ஏற்பட்டன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

பின்னர் கிளேர் பிரவுன் தனது 1எம்டிபி ஊழல் விவகாரங்களைப் பகிரங்கப்படுத்தும் போராட்டங்கள் குறித்து விளக்கிய பின்னர், அவருடன் கைகுலுக்கி அவர் சிங்கப்பூரில் நுழைவதற்கு அதிகாரிகள் அனுமதித்தனர் என்றும் பின்னர் முறையாக தனது பெயர் கறுப்புப் பட்டியலிடப்பட்டிருப்பது குறித்து புகார் ஒன்றை செய்யுமாறு அவருக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர் என்றும் சரவாக் ரிப்போர்ட் முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

528 பக்கங்களைக் கொண்ட “சரவாக் ரிப்போர்ட்: 1 எம்டிபி அம்பலமாக்கப்பட்டதன் உட்கதை” (The Sarawak Report: The Inside Story of the 1MDB Expose) என்ற அவரது நூல் அந்த விவகாரத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவர அவர் நடத்திய போராட்டங்களை விவரிக்கிறது.

மலேசியாவிலும் அவருக்கு எதிராக 2015-இல் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டு நாட்டில் அவர் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டது. மே 9 பொதுத் தேர்தலில் பக்காத்தான் கூட்டணி வெற்றி பெற்றதும் அவர் மீதான கைது ஆணையும் தடைகளும் இரத்து செய்யப்பட்டன.