Home நாடு “வாக்காளர்களுக்குப் பணம் வழங்கவில்லை” – சிவராஜ் சாட்சியம்

“வாக்காளர்களுக்குப் பணம் வழங்கவில்லை” – சிவராஜ் சாட்சியம்

976
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மே 9 பொதுத் தேர்தலில் மஇகா-தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ சி.சிவராஜ் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகப் பெற்ற வெற்றி செல்லாது என அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜசெக-பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி வேட்பாளர் எம்.மனோகரன் தொடுத்துள்ள வழக்கில் இன்று செவ்வாய்க்கிழமை சிவராஜ் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

“கேமரன் மலை பூர்வ குடியினரின் கிராமத் தலைவர்களுக்கும் (தோக் பாத்தின்) மற்ற பூர்வ குடி (ஓராங் அஸ்லி) வாக்காளர்களுக்கும் பணம் கொடுத்ததாகக் கூறப்படுவது உண்மையில்லை” என அவர் தனது சாட்சியத்தில் மறுத்தார்.

பூர்வகுடி கிராமத் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட உதவியானது அவர்கள் சமர்ப்பித்திருந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டது எனவும் அவர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

#TamilSchoolmychoice

“அத்தகைய உதவிகளை அவர்களுக்கு வழங்கும்போது அவர்கள் எனக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று நான் கூறவோ, அவர்களுக்கு நெருக்குதல் அளிக்கவோ இல்லை. மேலும் அவர்களுடனான சந்திப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டபோது, அவர்கள் பதிவு பெற்ற வாக்காளர்கள் என்பதும் எனக்குத் தெரியாது” எனவும் சிவராஜ் குறுக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.

அதே வேளையில் பூர்வகுடி கிராமத் தலைவர்களுக்கு பயணச் செலவுகளுக்காக பணம் வழங்கப்பட்டதை சிவராஜ் மறுக்கவில்லை. தொலைதூரக் கிராமங்களில் இருந்து சுமார் 5 மணி நேர பயணத்திற்குப் பின்னர் அவர்கள் கூட்டங்களுக்கு வரவேண்டியிருந்ததால் அவர்களுக்காக பயணச் செலவுத் தொகை வழங்கப்பட்டதாகவும் சிவராஜ் குறிப்பிட்டார்.

கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் இதற்கு முன்னர் பூர்வ குடி கிராமத் தலைவர் ஒருவர் சில கிராமத் தலைவர்களுக்கு தலா 300 ரிங்கிட் வழங்கப்பட்டதாக சாட்சியமளித்திருந்தார்.