Home கலை உலகம் கலக்குகிறார் ஓஷோ! இந்த முறை நெட்பிலிக்சில்…

கலக்குகிறார் ஓஷோ! இந்த முறை நெட்பிலிக்சில்…

1644
0
SHARE
Ad

ஹாலிவுட் – பகவான் ரஜனீஷ் என அழைக்கப்பட்டு பின்னர் ஓஷோ என்ற பெயரில் உலகப் புகழ் பெற்ற – அதே சமயத்தில் பல சர்ச்சைகளுக்கும் உரியவரான – ஓஷோவை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.

1990-ஆம் ஆண்டில் அவர் தனது 58-வது வயதில் மறைந்து விட்டாலும் இன்றுவரை அவரது தத்துவங்கள் அவரது நூல்கள் மூலமாகவும், காணொளிகள் மூலமான அவரது உரைகள் மூலமாகவும் அவர் நினைவு கூரப்படுகிறார்.

இன்று கார்ப்பரேட் சாமியார்கள் என அழைக்கப்படும் ஆன்மீகவாதிகளுக்கு முன்னோடியும் ஓஷோதான். அமெரிக்காவில் அவர் வாழ்ந்த காலத்தில் அவரிடம் 90 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இருந்தன. தனி விமானமும் இருந்தது.

#TamilSchoolmychoice

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அவர் முதலில் இந்தியாவின் பூனாவில் ஆசிரமம் அமைத்து பின்னர் அமெரிக்கா சென்று தனது ஆதரவாளர்களுடன் ஓரிகோன் மாநிலத்தில் உள்ள எண்டலோப் என்ற சிறிய நகரில் தனது ஆசிரமத்தை அமைத்தார்.

சிறு நூறு பேரே வாழ்ந்து வந்த அந்த சிற்றூரை ஓஷோவின் ஆதரவாளர்களும், பக்தர்களும் ஆக்கிரமித்த சம்பவங்களையும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களையும் 6 பாகங்களாக விவரிக்கும் ஆவணப் படம் ஒன்று இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நெட்பிலிக்ஸ் தளத்தில் ஒளியேறி மிகப் பெரிய அளவிலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

நெட்பிலிக்ஸ் என்பது மாதக் கட்டணம் செலுத்தி திரைப்படங்களையும், தொடர்களையும் கண்டுகளிக்கும் தளமாகும்.

“வைல்ட் வைல்ட் கண்ட்ரி” (Wild Wild Country) என்ற பரபரப்பான அந்தத் தொடர் ஒரு மர்ம நாவலை விட சுவாரசியமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. 1980-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் எண்டலோப் என்ற ஒரு சிறிய நகருக்குள் 80 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தை கையகப்படுத்தி பின்னர் அங்கு ஓர் ஆசிரமும் அமைத்து, அலை அலையாக அந்நகருக்குள் நுழையும் ஓஷோவின் ஆதரவாளர்கள் எவ்வாறு அந்த நகரையே தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகின்றனர், அங்கு தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த எத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டனர் என்பதை பரபரப்போடும் நடுநிலையோடும் விவரிக்கின்றது இந்த நெட்பிலிக்ஸ் தொடர்.

அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் மக்கள் அமைப்புகளும், அரசாங்கமும் சட்ட ரீதியாக நடத்திய போராட்டங்களும், ஓஷோவின் சில முன்னணி சிஷ்யர்களின் நடவடிக்கைகளும், அதைத் தொடர்ந்த ஓஷோவின் கைது, ஆன்ந்த் மா ஷீலா என்ற ஓஷோவின் தலைமை சிஷ்யையும் மற்றவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது போன்ற விறுவிறுப்பான சம்பவங்களும் இந்த நெட்பிலிக்ஸ் தொடரில் இடம் பெற்றுள்ளன.

பின்னர் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஓஷோ இந்தியா திரும்பி பூனா ஆசிரமத்தில் அடைக்கலமானார். 1985-இல் இந்தியா திரும்பிய ஓஷோ சில ஆண்டுகளுக்குப் பின்னர் மறைந்தார்.

அவரது முன்னணி சிஷ்யர்கள், சிஷ்யைகளையும் பேட்டி கண்டு உண்மை விவரங்களை விளக்கும் இந்தத் தொடர் அதே வேளையில் ஓஷோ குழுவினருக்கு எதிராகப் போராட்டம் நடத்தி உள்ளூர் மக்களில் சிலரையும் பேட்டி கண்டு அப்போதைய நிலவரங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது.

குறிப்பாக தொடரைப் பார்ப்பவர்களுக்கு ஆனந்த் மா ஷீலா என்ற ஓஷோவின் முன்னணி சிஷ்யையின் ஆளுமையும், திறனும், துணிச்சலும் அவரது சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளும் நிச்சயம் அவரை ஒரு மறக்க முடியாத கதாபாத்திரமாக நெஞ்சில் பதியவைக்கும்.

நீங்கள் நெட்பிலிக்ஸ் சந்தாதாரராக இருந்தால் தவறாமல் இந்த வைல்ட் வைல்ட் கண்ட்ரி தொடரைப் பாருங்கள். நிச்சயம் அசந்து போவீர்கள். ஓஷோவின் மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட சில வாழ்க்கைப் பக்கங்களையும் தெரிந்து கொள்வீர்கள்.

ஓஷோ ஆவணப் படத்திற்கு எம்மி விருது

சரி! முக்கியமான விஷயத்திற்கு வருவோம்!

ஓஷோ பற்றிய இந்த நெட்பிலிக்ஸ் ஆவணத் தொடருக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த ஆவணத் தொடருக்கான எம்மி (Emmy Awards) விருது வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற எம்மி விருதுகள் வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.

ஆக, மறைந்து 28 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் இன்றும் தனது தத்துவங்கள் மூலம் வாழ்ந்து வரும் ஓஷோ இப்போது நெட்பிலிக்ஸ் ஆவணத் தொடர் மூலம் இன்னொரு கோணத்தில் பிரபலமாகி உள்ளார்.

-இரா.முத்தரசன்