Home நாடு யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு செல்லியலின் நல்வாழ்த்துகள்! சில ஆலோசனைகள்…

யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு செல்லியலின் நல்வாழ்த்துகள்! சில ஆலோசனைகள்…

1306
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாளை வியாழக்கிழமை (செப்டம்பர் 20) தொடங்கும் யுபிஎஸ்ஆர் தேர்வுகளை எழுதவிருக்கும் அனைத்து இந்திய மாணவர்களுக்கும், குறிப்பாக தமிழ்ப் பள்ளிகளின் மாணவர்கள் அனைவருக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கல்வி அமைச்சின் புள்ளி விவரங்களின்படி நாடு முழுமையிலும் 440,743 மாணவர்கள் யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதுகிறார்கள். இவர்களில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளி மாணவர்களும் அடங்குவர்.

செப்டம்பர் 27-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் யுபிஎஸ்ஆர் தேர்வுகளுக்காக 8,100 தேர்வு மையங்கள் செயல்படும்.

#TamilSchoolmychoice

தேர்வுகளுக்கு செல்வதற்கு முன்னால் – மாணவர்களாகிய நீங்கள் வழக்கமாக அடிக்கடி கேட்கும் சில ஆலோசனைகள் மீண்டும் ஒருமுறை உங்களின் பார்வைக்கு:

1. எந்தத் தேர்வு எந்தத் தேதியில் நடைபெறுகிறது என்பதையும் நடைபெறும் நேரத்தையும் மீண்டும் ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

2. தேர்வுக்குரிய உபகரணங்களையும், முன்னேற்பாடுகளையும் முன்கூட்டியே தயார் செய்து  வைத்துக் கொள்ளுங்கள்.

3. தவறாமல் மீள்பார்வை செய்யவும்.

4. தேர்வுக்கு முதல் நாள் சீக்கிரமாகவே உறங்கச் சென்று உடலுக்கும் மனதுக்கும் நல்ல ஓய்வு கொடுங்கள்.

5.மறவாமல் உங்களின் அடையாள அட்டையை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தேர்வுக்குரிய அடையாள எண் கொண்ட நுழைவுச் சீட்டையும் பத்திரமாக முதல் நாளே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

6. சிறந்த முறையில் தேர்ச்சியடைய வேண்டும் என இறைவனைப் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதே வேளையில், தேர்வில் உங்களுக்குக் கிடைக்கப் போகும் தேர்ச்சி விகிதம் என்பது முழுக்க முழுக்க உங்களின் உழைப்பாலும், படிப்பாலும், மீள்பார்வைக்கு செலவிடும் நேரத்தாலும், உங்களின் கவனம் செலுத்தும் முறையினாலும் கிடைக்கப் போவது என்ற எண்ணத்தோடும் செயல்படுங்கள்.

7. கேள்விகளை நன்கு படித்து அதன் நோக்கத்தையும், அர்த்தத்தையும் புரிந்து கொண்டு பதில்களைத் தேர்வு செய்யுங்கள் – எழுதுங்கள்!

7. பதட்டம் வேண்டாம். இத்தனை ‘ஏ’ எடுக்க வேண்டும் என்ற மன அழுத்தமும் வேண்டாம். தன்னம்பிக்கையோடு தேர்வு எழுதுங்கள்! வெற்றி உங்களுக்கே!

யுபிஎஸ்ஆர் தேர்வு குறித்த சில விவரங்களையும் சில ஆலோசனைகளையும் மேலே உள்ள வரைபடம் காட்டுகிறது.