இந்தக் கூட்டத்தில் தமிழ்ப் பள்ளிகளுக்கான மேம்பாடு, இடைநிலைப் பள்ளிகளில் தமிழ், தமிழ் இலக்கிய பாடங்களைப் பயிற்றுவித்தலில் நிலவும் தேக்க நிலை, தமிழ்-தமிழ் இலக்கியப் பாடங்களைப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை-யில் சரிவு, தமிழ் ஆசிரியர்க் கல்வியை முடித்தவர்களை வேற்று மொழிப் பள்ளிகளில் பணி அமர்த்துவது குறித்த சிக்கல், மாணவர்களுக்கும் – ஆசிரியர்களுக்கும் இடையே நிலவ வேண்டிய ஒருங்கிணைப்பு, இடை நிலைப் பள்ளியில் மாணவர்கள் தமிழைப் படிப்பதில் பெற்றோரின் ஈடுபாடு குறித்தெல்லாம் அமைச்சருடன் கல்வித் துறையின் தமிழ் அதிகாரிகள் கலந்துரையாடினர்.
நம்பிக்கைக் கூட்டணி அரசில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் என்ற வகையில், நல்லெண்ண சந்திப்பு நிகழ்வாகவும் இது அமைந்தது. இந்தக் கூட்டத்தில் அமைச்சரின் சிறப்பு அதிகாரி சண்முகம் இரவீந்திரன், அரசியல் செயலாளர் முனியாண்டி பொன்னுசாமி, தனிச் செயலாளர் மாதவன் வேலாயுதம், ஊடகச் செயலாளர் இரத்னா சண்முகம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.