புத்ரா ஜெயா- நேற்று செவ்வாய்க்கிழமை ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்ட பாலிங் (கெடா) நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அசிஸ் அப்துல் ரகிம் இன்று காலை தடுப்புக் காவல் நீட்டிப்புப் பெற நீதிமன்றம் கொண்டுவரப்பட்டார்.
அப்துல் அசிஸ், தபோங் ஹாஜி எனப்படும் புனித ஹஜ் யாத்திரிகர்களுக்கான நிதி வாரியத்தின் முன்னாள் தலைவரும் அம்னோவைச் சேர்ந்த பாலிங் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும் ஆவார்.
அவருடன் அவரது சகோதரரான லத்திப் என்பவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இதற்கிடையில் அப்துல் அசிஸ் கைதுக்கும் 1எம்டிபி விவகாரத்துக்கும் சம்பந்தமில்லை என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அப்துல் அசிஸ் சில அரசாங்கச் சலுகைகளைப் பெற்றுத் தர முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்குடனான நெருக்கத்தைப் பயன்படுத்தினார் என்ற அடிப்படையிலும், அவரது கடந்த கால வாழ்க்கை மற்றும் தொடர்புகள் குறித்தும் ஊழல் தடுப்பு ஆணையம் தீவிரமாகப் புலனாய்வு செய்வதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.
கடந்த மே 23-ஆம் தேதி அசிசின் வீடுகளில் நடத்திய அதிரடி சோதனையில் ஊழல் தடுப்பு ஆணையம் 5 இலட்சம் ரிங்கிட் ரொக்கத்தையும், மேலும் 1.2 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய பலநாட்டு அந்நிய நாணயங்களையும் கைப்பற்றியது.