அவருடன் கைது செய்யப்பட்ட அவரது சகோதரர் அப்துல் லத்திப் மற்றும் அவரது உறவினர் முகமட் நஸ்ரி ஒஸ்மான் ஆகியோருக்கும் 4 நாட்களுக்குத் தடுப்புக் காவல் வழங்கப்பட்டது.
இன்று காலை தடுப்புக் காவல் நீட்டிப்புப் பெற அசிஸ் நீதிமன்றம் கொண்டுவரப்பட்டார். கைதிகளுக்குரிய ஆரஞ்சு நிற ஆடை அணிவிக்கப்பட்டு, கைவிலங்கிடப்பட்டு அவர் நீதிமன்றம் கொண்டுவரப்பட்டார்.
அப்துல் அசிஸ், தபோங் ஹாஜி எனப்படும் புனித ஹஜ் யாத்திரிகர்களுக்கான நிதி வாரியத்தின் முன்னாள் தலைவரும் அம்னோவைச் சேர்ந்த பாலிங் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும் ஆவார்.
இதற்கிடையில் அப்துல் அசிஸ் கைதுக்கும் 1எம்டிபி விவகாரத்துக்கும் சம்பந்தமில்லை என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தபோங் ஹாஜி நிதி வாரியம் தொடர்பில் வழங்கப்பட்ட சில குத்தகைகள் – அதன் மூலம் பெறப்பட்ட குத்தகைகள் ஆகிவற்றுக்காக அவர் விசாரிக்கப்படுகிறார் என அவரது வழக்கறிஞர் கூறியிருக்கிறார்.
மேலும் அப்துல் அசிஸ் சில அரசாங்கச் சலுகைகளைப் பெற்றுத் தர முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்குடனான நெருக்கத்தைப் பயன்படுத்தினார் என்ற அடிப்படையிலும், அவரது கடந்த கால வாழ்க்கை மற்றும் தொடர்புகள் குறித்தும் ஊழல் தடுப்பு ஆணையம் தீவிரமாகப் புலனாய்வு செய்வதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.
கடந்த மே 23-ஆம் தேதி அப்துல் அசிசின் வீடுகளில் நடத்திய அதிரடி சோதனையில் ஊழல் தடுப்பு ஆணையம் 5 இலட்சம் ரிங்கிட் ரொக்கத்தையும், மேலும் 1.2 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய பலநாட்டு அந்நிய நாணயங்களையும் கைப்பற்றியது. ஆனால் இந்தப் பணம் அம்னோவுக்கான நன்கொடை என்றும், வெளிநாட்டுப் பணம் அந்நிய நாடுகளில் இயங்கும் அம்னோ கிளப் தொடர்புடையவை என்றும் அப்துல் அசிஸ் கூறியிருந்தார்.