ஹூஸ்டன் – அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள மிகப் பெரிய நகரம் ஹூஸ்டன். அமெரிக்காவின் வான்வெளி ஆராய்ச்சி மையமான நாசா இங்குதான் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள அமெரிக்காவின் முக்கியப் பல்கலைக் கழகம் ஹூஸ்டன் பல்கலைக் கழகம்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைந்ததைத் தொடர்ந்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழக்கத்திலும் தமிழ் இருக்கை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அந்த முயற்சி வெற்றியடைந்துள்ளது.
இங்கு தமிழ் இருக்கை அமைய 6 மில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் பாதியை அதாவது சுமார் 3 மில்லியன் அமெரிக்க டாலரை டெக்சாஸ் மாநில அரசாங்கமே வழங்குவதற்கு முன்வந்துள்ளது.
எஞ்சிய தொகையான 3 மில்லியன் டாலரைத் திரட்டுவதற்கு அமெரிக்காவின் பல்வேறு தரப்புகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
இதன் தொடர்பில் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி ஹூஸ்டனில் “நிறுவன நன்கொடையாளர்கள் விருந்து” நிகழ்ச்சி ஒன்று அங்குள்ள தமிழ் இயக்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள், 120,000 அமெரிக்க டாலர்களை அன்றைய நிகழ்ச்சியில் திரட்டியுள்ளனர்.
இதற்கிடையில் ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சியில் உலகத் தமிழர்கள் ஆதரவளிக்குமாறு ஹூஸ்டன் தமிழ் இருக்கை குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
நன்கொடை மற்றும் மேலும் தகவல்களுக்கு https://houstontamilchair.org இணையத்தளத்திலும் https://www.facebook.com/HoustonTamilStudiesChair/ என்ற முகநூல் பக்கத்திலும் காணலாம்.
தமிழ் மொழி வளர்ச்சிக்காக அமெரிக்காவின் மிகப்பெரிய மாநிலமான டெக்சாஸ் அரசின் 3 மில்லியன் டாலர்கள் நன்கொடை, தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.