Home உலகம் பிரேசில் தேர்தல் – போல்சோனாரோ முன்னணி

பிரேசில் தேர்தல் – போல்சோனாரோ முன்னணி

1216
0
SHARE
Ad

ரியோ டி ஜெனிரோ – நாடு முழுமையிலும் எதிர்பார்க்கப்பட்டபடி கத்திக் குத்துக்கு ஆளான அதிபர் தேர்தல் வேட்பாளர் ஜேர் போல்சோனாரோ பிரேசில் அதிபர் தேர்தலுக்கான போட்டியில் முன்னணி வகிக்கிறார்.

அளிக்கப்பட்ட வாக்குகளில் 99.9 விழுக்காடு வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் இதுவரையில் 46.05 விழுக்காடு வாக்குகளை அவர் பெற்றிருக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பெர்னாண்டோ ஹட்டாட் 29.25 விழுக்காடு வாக்குகளைப் பெற்றார்.

எனினும் மொத்த வாக்குகளில் 50 விழுக்காட்டை விட குறைவான வாக்குகளையே போல்சோனாரோ பெற்றிருப்பதால், அதிபர் தேர்தலுக்கான இரண்டாவது கட்டத் தேர்தல் எதிர்வரும் அக்டோபர் 28-ஆம் தேதி நடைபெறுகிறது.

#TamilSchoolmychoice

பிரேசில் அதிபருக்கான தேர்தலில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குகள் பெற்றவர் மட்டுமே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். ஆனால் போல்சோனாரோ 46.05 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்றிருப்பதால் இந்த இரண்டாவது கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

இரண்டாவது கட்டப் போட்டி போல்சோனாரோ மற்றும் பெர்னாண்டோ ஹட்டாட் ஆகிய இருவருக்கும் இடையில் மட்டுமே நடைபெறும். முதல் கட்டப் போட்டியில் மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

200 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டில் வரலாறு காணாத அளவில் கடுமையான போட்டி அதிபர் தேர்தலில் இந்த முறை நடைபெறுகிறது.

முதல் கட்ட வாக்களிப்பில் வெற்றி பெற்றிருக்கும் போல்சோனாரோ முன்னாள் இராணுவத்தில் கேப்டன் பதவி வகித்த உயர் அதிகாரியுமாவார்.

போல்சோனாரோவுக்குக் கடுமையாகப் போட்டியை வழங்குபவர் 29.25 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கும் சாவ் பாலோ நகரின் முன்னாள் மாநகராட்சித் தலைவரான (மேயர்) பெர்னாண்டோ ஹட்டாட் ஆவார்.

இரண்டாம் கட்டத் தேர்தலில் இந்த இருவரில் ஒருவர்தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.