Home நாடு “இசா சமாட்டுக்கு வாக்களிக்க மஇகா உறுப்பினர்கள் ஏமாளிகள் அல்ல” சேவியர் கூறுகிறார்

“இசா சமாட்டுக்கு வாக்களிக்க மஇகா உறுப்பினர்கள் ஏமாளிகள் அல்ல” சேவியர் கூறுகிறார்

1083
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – நாளை நடைபெறவிருக்கும் போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் மஇகா உறுப்பினர்கள் சுயேச்சை வேட்பாளர் முகமட் இசா சமாட்டுக்கு வாக்களிப்பர் எனக் கூறப்படுவதை மறுத்திருக்கும் பிகேஆர் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் அவ்வாறு செய்வதற்கு மஇகா உறுப்பினர்கள் ஏமாளிகள் அல்ல என்றும் கூறியிருக்கிறார்.

“அம்னோ ம.இ.காவுக்கு தொடர்ந்து இழைத்துவரும் அநீதியை, இந்தியர்கள் நல்வாழ்வுக்கு ஏற்படுத்தியுள்ள இடர்ப் பாடுகளைப் போர்ட்டிக்சன் ம.இ.கா உறுப்பினர்கள் இன்னும் மறந்துவிடவில்லை. அம்னோவின் முன்னாள் மந்திரி பெசாரும், அமைச்சருமான இசா சமாட்டுக்கு வாக்களித்து அவர்களின் பொன்னான வாக்குகளை வீணடிக்கக் கூடாது” என சேவியர் தனது பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

சேவியர் கோல லங்காட் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமாவார்.

#TamilSchoolmychoice

“முன்னாள் தேசிய முன்னணி அரசாங்கம் இந்தியர்களின் நல்வாழ்வுக்குச் சேவையாற்ற மறுத்த ஓர் நிர்வாகம் மட்டுமின்றி, நம் மக்களின் வாழ்வுக்கும், மத நம்பிக்கைகளுக்கும் கேடு விளைவித்ததுடன், உழைத்து ஓடாய்ப் போன இந்த ஏழை இனம் தனது இறுதிப் பயணத்தைக்கூடக் கௌரவமாக மேற்கொள்ள முடியாதவாறு இடையூறு செய்த கட்சி ”அம்னோ” என்பதனை மறுக்கக் கூடாது” எனவும் சேவியர் கூறியிருக்கிறார்.

“போர்ட்டிக்சன் தொகுதிக்கு அருகிலிருக்கும் சிலாங்கூர் மக்கள் 25-க்கும் மேற்பட்ட மக்கள் நலன் திட்டங்களின் வாயிலாக இன்று பயனடைந்து வருகின்றனர். அம்மாநிலத்தின் நம்பிக்கைக் கூட்டணி அரசு, மக்கள் நலன் திட்டங்களில் பங்கேற்க எவ்வித மத, இனப் பாகுபாடுகளையும்  காட்டுவதில்லை. ஆனால், அம்மாநிலம் தேசிய முன்னணி ஆட்சியில் இருந்த பொழுது வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களுக்குக் கூட நிலம் வழங்கி வாழவைத்த தேசிய முன்னணி அரசாங்கத்துக்குத் தோட்டங்களில் உழைத்து ஓடாய்ப் போன தமிழர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. தோட்டத்தை விட்டு வெளியேறி இருக்க இடமில்லாமல் தவித்தவர்கள், பல பட்டணப் புறம்போக்கு நிலங்களில் ஒதுங்கியவர்கள், அவர்களின் கையிலிருந்த கடைசி சேமிப்பான சேமநிதி சந்தாவின் வழி நிறுவிய குடிசைகளையும், தேசிய முன்னணியின் ‘சூழியம்  குடிசை’ என்ற கோட்பாட்டின் படி உடைத்தெறிந்தது. அங்கிருந்த மக்களையும், ஆலயங்களையும் அகற்றியது” என்றும் சேவியர் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

“மாநில அரசாங்கத்தில் எல்லா மக்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்த மரணச் சகாய நிதி கூட இந்த ஏழைச் சமுதாயத்திற்குக் கிட்டாமல் செய்த பாவிகளின் கட்சி அம்னோ என்பதனை நாம் மறக்கக் கூடாது. அவர்கள் இன்னும் மாறவே இல்லை என்பதனை ம.இ.காவுக்குப் போர்ட்டிக்சன் இடை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது எடுத்துக் காட்டுகிறது. தேசிய முன்னணி  கட்சிகளின் பாரம்பரியத் தொகுதிகளான சிலாங்கூர் சுங்கை காண்டிசில் அம்னோவும், பலாக்கோங் சட்டமன்றத் தொகுதியில் ம.சீ.சாவும் போட்டியிட்ட வேளையில் ம.இ.காவுக்கு மட்டும் ஏன் அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது? தேசிய முன்னணியின் எந்தக் கட்சியும் போர்ட்டிக்சனில் போட்டியிடாது என்று தன்னிச்சையாக அம்னோ ஏன் அறிவித்தது? ம.இ.கா வெற்றி பெற்றுவிடும் என்ற அச்சமா?” என்றும் சேவியர் கேள்வி எழுப்பினார்.

“ஆனால் இன்று அம்னோவின் முக்கியத் தேசியத் தலைவர்களில் ஒருவரும் முக்கிய உள்ளூர் அம்னோ தலைவருமான முகமது இசா சமாட் அம்னோ உறுப்பினர்கள் தன்னை ஆதரிப்பார்கள் என்றே அறிக்கை விட்டுள்ளார். அவர் வெற்றி பெற்றாலும், அதற்கான முழு மதிப்பையும், மரியாதையையும் பலனையும் அம்னோவே அனுபவிக்கப்போகிறது. ம.இ.காவும் இந்தியர்களும் மீண்டும் ஏமாற்றப்பட்டு விட்டார்கள்! இன்னுமா ம.இ.கா முகமட் இசா சமாட்டுக்கு ஓட்டு போட வேண்டும்? அப்படிப்பட்ட வெட்கங்கெட்டவர்கள் ம.இ.கா உறுப்பினர்கள் இல்லை என்பதனை அதன் உறுப்பினர்கள் அம்னோவிற்கு உரக்க உணர்த்துவார்கள் என்று நம்புகிறேன்” என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.