சபரிமலை – பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை நாளை புதன்கிழமை திறக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இந்த ஆலயத்தில் பெண்களும் நுழையலாம் என்பதால், ஐயப்பனுக்கு விரதம் இருந்து நாளை ஆலயத்திற்கு வரத் தாங்கள் தயாராக இருப்பதாக பல பெண் அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன.
கேரள அரசாங்கம் சார்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கும் அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் சபரிமலையில் பெண்களும் சரிசமமாக வழிபடலாம் என்பதே தங்களின் நிலைப்பாடு என்றும் இதன் காரணமாக உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வுக்குத் தாங்கள் விண்ணப்பிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். ஆனால் வேண்டுமானால் சபரிமலை ஆலயத்தை நிர்வகிக்கும் தேவசம் வாரியம் விரும்பினால் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அதற்குத் தாங்கள் குறுக்கே நிற்க மாட்டோம் என்றும் பினராய் விஜயன் கூறியுள்ளார்.
ஆனால், தேவசம் வாரியமோ, உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தத் தாங்கள் முனைந்துள்ளோம் என்றும் தீர்ப்புக்கு எதிராக நாங்கள் மேல்முறையீடோ, மறு ஆய்வோ, சீராய்வு மனுவோ சமர்ப்பிக்க மாட்டோம் என்றும் கூறியிருக்கிறது.
இதற்கிடையில் பாஜக ஆதரவோடு கேரளா மற்றும் அண்டை மாநிலங்களில் பிரம்மாண்டமான அளவில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான பேரணிகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில் நாளை புதன்கிழமை பெண்கள் முதன் முறையாக வரலாற்றுபூர்வ சம்பவமாக சபரிமலை ஆலயத்தில் காலடி வைப்பார்களா – அல்லது கடுமையானப் போராட்டங்களின் காரணமாக பெண்கள் சபரிமலையில் நுழைவதிலிருந்து பின்வாங்குவார்களா?
இந்தியா முழுவதும் சபரிமலை ஐயப்பன் பக்தர்கள் காத்திருக்கிறார்கள்.