திருவனந்தபுரம் – சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் 10-க்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட வயதிலான பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து அந்த ஆலயம் அமைந்திருக்கும் கேரள மாநிலம் முழுவதும் எதிர்ப்புப் பேரணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இன்று புதன்கிழமை மாலையில் ஐயப்பன் ஆலயத்தில் நடை திறக்கப்பட, பல பெண்கள் மலை மீது ஏறத் தொடங்கியுள்ளனர். எனினும் அந்தப் பெண்கள் மீது சில கும்பல்கள் தாக்குதல்களைத் தொடுத்துள்ளனர்.
சபரிமலையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நிலக்கல் என்ற இடத்தில் சபரிமலை நோக்கிச் செல்லும் பேருந்துகளை நிறுத்தி, அதற்குள் இருக்கும் பெண்கள் தாக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்க வந்துள்ள பெண்கள் நிலக்கல் எனப்படும் மலையடிவார ஊரில் காத்திருக்கின்றனர்.
எதிர்ப்பு தெரிவித்தவர்களைக் காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.