Home நாடு மகாத்மா காந்தி கலாசாலைக்கு உதவிகள் வழங்கப்படும் – இந்திய தூதர் அறிவிப்பு

மகாத்மா காந்தி கலாசாலைக்கு உதவிகள் வழங்கப்படும் – இந்திய தூதர் அறிவிப்பு

1359
0
SHARE
Ad

சுங்கை சிப்புட் – “இந்திய நாட்டின் விடுதலைத் தந்தையும் மிகச் சிறந்த உலகத் தலைவராகவும் மதிக்கப்படும் மகாத்மா காந்தியின் பெயரில் மலேசியாவில் ஒரு தமிழ்ப்பள்ளி செயல்படும் செய்தியை அறிந்த பொழுது நான் மிகவும் பெருமை அடைந்தேன். இந்த மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளிக்கு இந்தியத் தூதரகத்தின் மூலமாக உதவிகள் வழங்கப்படும்” என கடந்த புதன்கிழமை அக்டோபர் 17-ஆம் தேதி இப்பள்ளிக்கு அதிகாரபூர்வ சிறப்பு வருகை மேற்கொண்ட மலேசியாவுக்கான இந்திய தூதர் மிருதுள்  குமார் தெரிவித்தார்.

இந்தியத் தூதர் மிருதுள் குமார்

“இந்தப் பள்ளிக்குள் நுழைந்து காந்தி மண்டபத்தில் மகாத்மாவின் உருவச் சிலையைக் கண்டதும் என்னுடைய மனம் மிகவும் நெகிழ்ந்துவிட்டது. மலேசியாவில் வாழும் நீங்கள் காந்தியை மிகவும் மதிப்பதும் அவருடைய பெயரில் பள்ளியை நடத்துவதும் கண்டு நான் பெருமைப்படுகிறேன். இந்தப் பள்ளியின் வளர்ச்சியும் முன்னேற்றங்களும் எனக்குத் தெரிவிக்கப்பட்டன. உண்மையிலேயே இந்தப் பள்ளி மிகவும் சிறந்த ஒரு பள்ளியாக இருக்கிறது. அதனால், இங்கே படிக்கும் குழந்தைகளுக்கு இந்தியத் தூதரகம் உதவிகள் செய்வது முக்கியம் எனக் கருதுகிறேன். எனவே, பள்ளி நூலகத்தை மேம்படுத்தி அங்கு மாணவர்களுக்காக நிறைய நூல்களை இந்தியாவிலிருந்து தருவித்து வழங்க முடியும். பள்ளி ஆசிரியர்களை இந்தியாவுக்கு அனுப்பி கற்பித்தல் தொடர்பான பயிற்சிகள் வழங்க ஆவன செய்யப்படும். மேலும் மாணவர்களின் பயன்பாட்டுக்காக ஒரு தகவல் தொழில்நுட்ப அறை அமைத்துக் கொடுக்க இந்தியத் தூதரகம் நடவடிக்கை எடுக்கும்” என அவர் தமதுரையில் மேலும் குறிப்பிட்டார்.

முன்னதாக வரவேற்புரை ஆற்றிய பள்ளியின் தலைமையாசிரியர் பள்ளியின் அடைவுகளைப் பற்றி விளக்கினார். மேலும் பள்ளியின் தேவைகள் பற்றியும் சில கோரிக்கைகளை முன்வைத்தார். இறுதியில் நன்றியுரையாற்றிய பள்ளியின் அறங்காவலர் அமுசு விவேகந்தன் பள்ளியின் வரலாற்றுச் சுவடுகளை விளக்கிப் பேசினார். ஒரு தமிழ்ப்பள்ளிக்கு இந்தியத் தூதர் வருகையளிப்பது இதுவே முதன்முறை என்றும் அந்த வாய்ப்பினை பெற்றதற்காக மகாத்மா காந்தி கலாசாலைக்கு மிகவும் பெருமை என்றும் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

இதே நிகழ்ச்சியில், இந்தியத் தூதரின் துணைவியார், தோ புவான் உமா சம்பந்தன், துன் சம்பந்தன் மகள் செல்வி.தேவகுஞ்சரி, பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் சுப.சற்குணன், மனித வள அமைச்சின் சிறப்பு அதிகாரி தியாகராஜன், மாவட்ட மன்ற உறுப்பினர் ஹாலன் மற்றும் சிறப்பு விருந்தினர்களும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், ஆசிரியர்கள் மாணவர்கள் எனத் திரளாக அறுநூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.