Home நாடு மஇகா தேர்தல் : 2015-இல் தவற விட்டதை சரவணன் 2018-இல் கைப்பற்றுவாரா?

மஇகா தேர்தல் : 2015-இல் தவற விட்டதை சரவணன் 2018-இல் கைப்பற்றுவாரா?

1191
0
SHARE
Ad

கோலாலம்பூர் – (நாளை சனிக்கிழமை அக்டோபர் 20-ஆம் தேதி நடைபெறும் மஇகா தேர்தல்களில் தேசியத் துணைத் தலைவருக்கான போட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்தத் தேர்தல் குறித்த தனது பார்வையை வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

2015-ஆம் ஆண்டு!

2013-இல் நடைபெற்ற மஇகா தேர்தல்கள் செல்லாது என சங்கப் பதிவகத்தால் அறிவிக்கப்பட்டு அதற்கான மறுதேர்தல் 2015-இல் நடைபெற்ற போது கட்சிக்கான தேசியத் துணைத் தலைவர் தேர்தலில் டத்தோஸ்ரீ எம்.சரவணனும், டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணியும் போட்டியிட்டனர். மஇகா வட்டாரங்களில் பரவலாக சரவணனே அந்தத் தேர்தலில் வெல்வார் என ஆரூடம் கூறப்பட்டது.

#TamilSchoolmychoice

அதற்கான வலுவான காரணமும் இருந்தது.

2013-இல் நடந்த உதவித் தலைவர்களுக்கான தேர்தலில் சரவணன் இரண்டாவது நிலையில் வெற்றி பெற மற்றொரு உதவித் தலைவரும், சரவணனுடன் அணி சேர்த்துப் போட்டியிட்டவருமான தேவமணி தோல்வியடைந்திருந்தார்.

எனவே, மூன்று உதவித் தலைவர்களில் ஒருவராகக் கூட வெற்றி பெற முடியாத தேவமணி எப்படி நேரடித் தேர்தலில் அடுத்த 2 ஆண்டுகளில் (2015-இல்) துணைத் தலைவர் போட்டியில் சரவணனைத் தோற்கடிக்க முடியும் என்ற எண்ணம்தான் கட்சி வட்டாரங்களில் பரவியிருந்தது.

ஆனால் முடிவுகளோ வேறுவிதமாக – ஒருவகையில் அதிர்ச்சி தரக் கூடியதாக அமைந்தது.

18 வாக்குகளில் துணைத் தலைவர் தேர்தலில் தேவமணியிடம் தோல்வியடைந்தார் சரவணன்.

இப்போது 3 ஆண்டுகள் கடந்த நிலையில் மஇகாவில் அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

முதலாவதாக 2015 காலகட்டத்தில் மஇகா ஆளுங்கட்சியின் அங்கமாக இருந்ததது. இப்போதோ, ஆட்சியில் இல்லாத நிலைமை.

2015 மஇகா தேர்தல்களின்போது….

2015-இல் முதலாவது உதவித் தலைவராக வென்ற டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் இன்று அனைவரையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டு, கட்சியின் தேசியத் தலைவராகி விட்டார்.

துணைத் தலைவராக வென்ற தேவமணியோ, இந்த முறை மீண்டும் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டிருக்கிறார்.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் வெற்றி பெற்றிருக்கும் சரவணன் இந்த முறை மீண்டும் துணைத் தலைவருக்குப் போட்டியிடுகிறார்.

எதிர்த்துப் போட்டியிடும் டான்ஸ்ரீ இராமசாமி

டான்ஸ்ரீ எம்.இராமசாமி

சரவணன் அநேகமாக ஏகமனதாக வெற்றி பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அதிரடியாகப் போட்டியில் குதித்திருக்கிறார் டான்ஸ்ரீ எம்.இராமசாமி.

சரவணனுக்கு 18-ஆம் எண் இராசியோ என்னவோ தெரியவில்லை. 2015-இல் 18 வாக்குகளில் எந்தத் துணைத் தலைவர் பதவியைத் தவற விட்டாரோ அதே பதவியை 2018-இல் மீண்டும் கைப்பற்றப் போட்டியில் குதித்திருக்கிறார்.

மஇகா வட்டாரங்களில் பேசிப் பார்த்தபோது, இந்த முறை சரவணன் வெற்றி பெறுவார் என்பதே பரவலான கண்ணோட்டமாக இருக்கிறது.

அதற்கான காரணங்களையும் சரவணன் ஆதரவாளர்கள் பட்டியிலிடுகின்றனர்.

முதலாவதாக, இந்த முறை சரவணன் கடந்து முறை போன்று எளிதாக வென்று விடுவோம் என்று மிதமாக இருக்கவில்லை. அடிவரை சென்று பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

ஸ்டாலின் கலந்து கொண்ட கோலாலம்பூர் நிகழ்ச்சியில் சரவணன்…

வாக்களிக்கும் முறைகள் மாற்றப்பட்டிருப்பதும் சரவணனுக்கு சாதகமாக இருக்கும் எனக் கருதப்படுகின்றது. கடந்த முறை போன்று 1,500 பேராளர்கள் மட்டுமே வாக்களிக்கும் தேர்தல் களமாக இல்லாமல், நாடு முழுமையிலும் ஒவ்வொரு கிளையில் இருந்தும் 6 பேராளர்கள் (தலைவர், துணைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர், தகவல் பிரிவுத் தலைவர்) வாக்களிக்கும் களமாக இந்த முறை மஇகா தேர்தல்கள் உருமாறியிருக்கின்றன.

அடிமட்ட உறுப்பினர்களோடு பழகுவதிலும், தொடர்புகள் கொண்டிருப்பதிலும், நாடு முழுமையிலும் கட்சிக்காரர்களைத் தெரிந்து வைத்திருப்பதிலும் இன்றைய நிலையில் சரவணனுக்கு ஈடாக இன்னொருவரைச் சுட்டிக் காட்ட முடியாது.

தனது பயணத்தின்போது சாலை விபத்தொன்றில் பாதிப்படைந்த மலாய் பெண்மணிக்கு ஒருமுறை சரவணன் உதவிக் கரம் நீட்டியபோது…

எப்போதும், மஇகா தலைமையகத்தின் இரண்டாவது மாடியில் இருக்கும் ‘நாம்’ இயக்கத்தின் அலுவலகத்தில் மஇகா தலைவர்கள் அவரைப் பார்க்கலாம். இல்லாவிட்டால், மஇகா தலைமையகத்தை ஒட்டியிருக்கும் திறந்த வெளி தேநீர்க் கடையில் அவருடன் அமர்ந்து தேநீர் அருந்தி அளவளாவலாம்.

இந்த எளிமையான அணுகுமுறையோடு, கட்சியிலும் சமுதாயத்திலும் அவர் கொண்டிருக்கும் தொடர்புகளும் அவருக்கு இந்தத் தேர்தலில் துணை நிற்கின்றன என்கின்றன மஇகா வட்டாரங்கள்.

நூல் வெளியீடுகள், இலக்கிய நிகழ்ச்சிகள், தமிழ் மொழி சம்பந்தப்பட்ட சமுதாய நிகழ்ச்சிகள் போன்றவற்றில் சரவணனின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும். அந்த அளவுக்கு மஇகாவில் யாரும் தமிழ் மொழி, இலக்கியம் குறித்து ஈடுபாடு காட்டுவதில்லை.

சரவணனின் அழகுத் தமிழ் மேடைப் பேச்சுகளும் மஇகாவினரைக் கவர்ந்த ஒன்று!

இவையெல்லாம் ஒருங்கிணைந்து சரவணனுக்கு சாதகமான சூழலை இந்த முறை மஇகா தேர்தல்கள் ஏற்படுத்தித் தந்திருக்கின்றன.

கலைஞரின் இறுதிச் சடங்குகளில் நேரில் சென்று கலந்து கொண்ட சரவணன் கலைஞரின் நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்

எல்லாவற்றுக்கும் மேலாக தேசியத் தலைவர் விக்னேஸ்வரன், சரவணனே அடுத்த துணைத் தலைவராக வரவேண்டும் என்று கூறி மஇகா தலைவர்களிடத்தில் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து வருவதும் சரவணனின் வெற்றி வாய்ப்புகளை அதிகரித்திருக்கிறது.

கடுமையான போட்டியை வழங்கும் டான்ஸ்ரீ இராமசாமி

எனினும், சரவணனை எதிர்த்துப் போட்டியிடும் டான்ஸ்ரீ இராமசாமியும் நாடு முழுமையிலும் தீவிரப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றார். அவரது போட்டியை சாதாரணமாகக் குறைத்து மதிப்பிட முடியாது என்றும் கணிசமான வாக்குகளை அவர் பெறுவார் என்றும் சில மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாற்றம் வேண்டும் என்ற பிரச்சார முழக்கம், வாக்களிக்கும் பேராளர்களுடனான விருந்துபசரிப்புகள், என இராமசாமியும் தீவிரமாகத் தேர்தல் களத்தில் இறங்கியிருக்கிறார்.

இருப்பினும், மஇகா கிளைத் தலைவர்களுடன் தொடர்புகள் அவ்வளவாக இல்லாதது, அவரது அணுகுமுறை, திடீரென போட்டியிடுவதாக அறிவித்ததால், குறுகிய காலத்திலேயே அதிகமான வாக்காளர்களைச் சந்திக்க வேண்டிய நெருக்கடி, இவையெல்லாம் அவருக்கு சாதகமற்ற சூழலை ஏற்படுத்தியிருக்கின்றன என மஇகா தேர்தல்களைப் பின்பற்றி வரும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

மஇகா தேர்தல் குறித்து செல்லியல் ஊடகத்திடம் கருத்து தெரிவித்த சரவணன் பின்வருமாறு கூறினார்:

“இன்றைக்கு மஇகா ஒரு முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறது. மக்களின் ஆதரவையும், அபிமானத்தையும், இழந்த நிலையில் அவற்றை மீண்டும் பெற கட்சி போராட வேண்டியதிருக்கிறது. நடப்பு தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுடன் இணைந்து, கட்சிக்கான ஆதரவை மீண்டும் மீட்டெடுக்க மக்களுடனும் சமுதாயத்துடனும் அணுக்கமான தொடர்புகள் கொண்ட ஒரு தேசியத் துணைத் தலைவரே இன்றைய மஇகாவின் தேவையாக, தேர்வாக இருக்க வேண்டும். அந்த பொறுப்புக்கு நான் பொருத்தமானவன் என்பதால்தான் நான் மீண்டும் இந்தப் பதவிக்குப் போட்டியிடுகின்றேன். நாடு முழுவதும் சுற்றி வந்ததில் எனக்கான ஆதரவுக் களம் சிறப்பாக இருப்பதாகவே கருதுகிறேன். கட்சியில் அடிமட்ட உறுப்பினர் பொறுப்பிலிருந்து கட்டம் கட்டமாக வளர்ந்து வந்திருக்கிறேன். எந்த நிலையிலும் கட்சியை விட்டுக் கொடுக்காமல் மஇகாவுடனே எனது அரசியல் போராட்டத்தை நடத்தி வந்திருக்கிறேன். அதனைப் பேராளர்களும் உணர்ந்து எனக்கு வாக்களிப்பார்கள் என நம்புகிறேன்”

நாளை சனிக்கிழமை இரவு மஇகா தேர்தல்களின் முடிவுகள் அறிவிக்கப்படும்போது சரவணனின் நம்பிக்கை உண்மையாகுமா – 2015-இல் 18 வாக்குகளில் அவர் தவற விட்ட துணைத் தலைவர் பதவியை இந்த முறைக் கைப்பற்றுவாரா? – என்பது தெரிந்து விடும்!

-இரா.முத்தரசன்