கோலாலம்பூர்- அம்னோ தேசியத் தலைவரும் முன்னாள் தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி மீது இன்று கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ்) அடுக்கடுக்காக 45 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன. குற்றவியல் நம்பிக்கை மோசடி தொடர்பில் 10 குற்றச்சாட்டுகளும், ரிங்கிட்42,083,132-99 இலஞ்சம் பெற்றது தொடர்பில் 8 குற்றச்சாட்டுகளும், ரிங்கிட்72,063,618-15 கள்ளப்பணப் பரிமாற்றம் தொடர்பில் 27 குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.
இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்து சாஹிட் விசாரணை கோரினார். 65 வயதான சாஹிட்டுக்கு 2 மில்லியன் பிணைத் தொகை நிர்ணயித்த நீதிமன்றம், அவரது அனைத்துலகக் கடப்பிதழையும் வழக்கு முடியும் வரை முடக்கி வைத்தது.இன்றைக்குள் 1 மில்லியன் பிணைத் தொகையை செலுத்த வேண்டும் என்றும், எஞ்சிய 1 மில்லியன் தொகையை எதிர்வரும் அக்டோபர் 26-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனவும் பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினருமான சாஹிட்டுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கு டிசம்பர் 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.