கோலாலம்பூர்- முன்னாள் கூட்டரசு நீதிபதி கோபால் ஸ்ரீராமின் நீண்ட கால சட்டத் துறை பயணத்தில் ஒரு மிக முக்கியமான காலகட்டத்தை தற்போது அடைந்திருக்கிறார். முன்னாள் பிரதமருக்கு எதிராகவும், 1 எம்டிபி ஊழல்கள் தொடர்பாகவும் அரசாங்கத்தின் சார்பில் இலவசமாக வழக்காட முன்வந்திருக்கும் கோபால் ஸ்ரீராம் நேற்று முன்னாள் துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமிடி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டபோது, அவருக்கு எதிராகவும் வழக்காடினார்.
இதன் மூலம் அம்னோ – தேசிய முன்னணியின் இரண்டு முக்கியத் தலைவர்களின் எதிர்காலத் தலைவிதியை நிர்ணயிக்கும் பெரும் பொறுப்பைக் கையிலெடுத்திருக்கிறார் ஸ்ரீராம்.
அம்னோ தேசியத் தலைவரும் முன்னாள் தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி மீது நேற்று கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ்) 45 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன. குற்றவியல் நம்பிக்கை மோசடி தொடர்பில் 10 குற்றச்சாட்டுகளும், ரிங்கிட்42,083,132-99 இலஞ்சம் பெற்றது தொடர்பில் 8 குற்றச்சாட்டுகளும், ரிங்கிட்72,063,618-15 கள்ளப்பணப் பரிமாற்றம் தொடர்பில் 27 குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.
இந்த வழக்கில் அரசு தரப்பின் நான்கு வழக்கறிஞர்களுக்கு தலைமையேற்கிறார் ஸ்ரீராம்.
சாஹிட் ஹமிடியின் சார்பில் 12 வழக்கறிஞர்கள் ஹிஷாம் தே போ தெக் தலைமையில் அணிவகுத்திருக்கின்றனர்.
சாஹிட் ஹமிடி குற்றவியல் (கிரிமினல்) நம்பிக்கை மோசடிகளுக்காக 10 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். ஆக்கால் பூடி அறவாரியத்தின் அறக்காப்பாளர் என்ற முறையில் RM20,833,132.99 நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதற்காக அவர் மீது இந்தக் குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
சாஹிட் மீது இலஞ்சம் பெற்றது தொடர்பில் 8 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. மஸ்தோரோ கென்னி (Mastoro Kenny IT Consultant & Services) என்ற நிறுவனத்திடம் இருந்து ஒருமுறை 250,000 ரிங்கிட்டும், இன்னொரு முறை 8 மில்லியனும் அவர் இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டுகளும் இதில் அடக்கம்.
மேலும் 5 மில்லியன் ரிங்கிட்டையும் அதே நிறுவனத்திடமிருந்து சாஹிட் பெற்றிருக்கிறார் என்றும் அவர் மீதான குற்றப்பத்திரிக்கை விவரிக்கிறது.
மைஇஜி (MyEG) என்ற நிறுவனம் உள்துறை அமைச்சின் சார்பாகக் கையாண்ட பணிகளுக்காக சாஹிட்டுக்கு இந்தப் பணம் இலஞ்சமாக வழங்கப்பட்டிருக்கிறது.
டத்தா சோனிக் குரூப் பெர்ஹாட் (Data Sonic Group Berhad) என்ற நிறுவனத்தின் இயக்குநர் சியூ பென் பென் என்பவரிடம் இருந்து 5 மில்லியன் ரிங்கிட்டை சாஹிட் பெற்றார் என்பதும் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் மற்றொரு குற்றச்சாட்டாகும். இதே சியூ என்ற நபரிடமிருந்து இன்னொரு முறை 1 மில்லியன் ரிங்கிட்டை இலஞ்சமாகப் பெற்றார் என்றும் சாஹிட் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து இதே போன்று மேலும் பல குற்றச்சாட்டுகளை இலஞ்சம் பெற்றதற்காக எதிர்நோக்கியிருக்கிறார் சாஹிட்.