Home இந்தியா சபரிமலை நடை சாத்தப்படுகிறது – 9 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்

சபரிமலை நடை சாத்தப்படுகிறது – 9 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்

1020
0
SHARE
Ad

சபரிமலை – கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி திறக்கப்பட்ட சபரிமலை கோவில் இன்றுடன் நடை சாத்தப்படுகிறது. எல்லா வயதுப் பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் இதுவரையும் ஒரு பெண்கூட சபரிமலை 18-ஆம் படியில் அனுமதிக்கப்படவில்லை.

எனினும் பெண்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி சபரிமலை கோவிலுக்குள் செல்ல முற்பட்டனர். அவர்களுக்கு பலத்த பாதுகாப்பும் வழங்கப்பட்டது. எனினும் பக்தர்களின் தீவிர எதிர்ப்புப் போராட்டத்தினால் அவர்களால் ஆலயத்திற்குள் நுழைய முடியவில்லை.

இதற்கிடையில், சபரிமலையின் தலைமை அர்ச்சகரும், ஆலய நிர்வாகத்தினரும் பெண்களை ஆலயத்திற்குள் அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

தங்களின் எதிர்ப்பையும் மீறி, பெண்களை அனுமதித்தால், ஆலயத்தின் கதவுகளைச் சாத்திவிட்டு நாங்கள் சென்றுவிடுவோம் என்றும் ஆலய நிர்வாகத்தினர் மிரட்டியுள்ளனர்.

இதுவரையில் 9 பெண்கள் சபரிமலை ஆலயத்திற்குள் நுழைய முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவசம் வாரியம் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளது. இதனை தேவசம் வாரியத்தின் தலைவர் ஏ.பத்மகுமார் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த சூழ்நிலையில்தான் சபரிமலை கோவில் நடை இன்று சாத்தப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் குவிந்துள்ள பத்திரிக்கையாளர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என காவல் துறையினர் அறிவித்துள்ளனர். கோவில் நடை சாத்தப்பட்டதும் பத்திரிக்கையாளர்கள் மீது எதிர்ப்பாளர்கள் தாக்குதல் நடத்தலாம் என அச்சத்தின் காரணமாகவே பத்திரிக்கையாளர்கள் வெளியேற வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.