Home இந்தியா 18 தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் மேல்முறையீடு

18 தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் மேல்முறையீடு

1144
0
SHARE
Ad

சென்னை – இங்குள்ள உயர்நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பினால் தங்களின் சட்டமன்றப் பதவிகளை இழந்த 18 தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் புதுடில்லியிலுள்ள உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்ய ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக அவர்களின் சார்பில் பேசிய தங்கத் தமிழ்ச் செல்வன் (படம்) அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், அந்த 18 சட்டமன்றத் தொகுதிகளும் காலியாக உள்ளன என தமிழகத் தேர்தல் ஆணையமும் இதுவரையில் அறிவிக்கவில்லை.

இதன் காரணமாக, இந்த 18 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் இன்னும் இடைத் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கும் இரண்டு சட்டமன்றங்கள் என எல்லாம் சேர்ந்து மொத்தம் 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்கள் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

#TamilSchoolmychoice

தமிழக சட்டமன்ற சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கத்தை சென்னை உயர்நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணா உறுதிப்படுத்தி நேற்று வியாழக்கிழமை பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.

தமிழக சட்டமன்ற அவைத் தலைவர் 18 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் ஒரு நீதிபதி ஆதரவாகவும் மற்றொரு நீதிபதி அந்தத் தகுதி நீக்கம் செல்லாது எனவும் தீர்ப்பளித்தனர். இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் நியமித்த மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணா நேற்று தனது தீர்ப்பை வழங்கினார்.

18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம் செல்லும் என்ற அவரது பரபரப்பான தீர்ப்பைத் தொடர்ந்து ஏற்கனவே காலியாக இருக்கும் 2 சட்டமன்றத் தொகுதிகளுடன் சேர்ந்து தற்போது 20 சட்டமன்றத் தொகுதிகள் காலியாகி உள்ளன. இந்த 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, விரைவில் இந்தத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் முக்கிய கட்சிகள் அனைத்தும் 20 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருப்பதால், அங்கு மக்களின் பிரதிநிதித்துவம் நிலைநிறுத்தப்படவும், அவர்களுக்கான சேவைகள் தொடரவும் உடனடியாக இடைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளன.

நடைபெறும் 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களிலும் அதிமுக போட்டியிட்டு வெல்லும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.