கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை நடைபெற்ற மஇகாவின் 72-வது தேசியப் பொதுப் பேரவையில் தலைமை உரையாற்றிய கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தற்போது நம்பிக்கைக் கூட்டணியில் (பக்காத்தான் ஹரப்பான்) பல்வேறு குழப்பங்கள் நீடிப்பதாகவும், அந்தக் கூட்டணிக்கு அடுத்துத் தலைமையேற்கப் போவது யார் என்ற சந்தேகங்கள் நிலவுவதாகவும், அதன் காரணமாக அன்வார் இப்ராகிம் அடுத்த பிரதமராக வருவது என்பதும் சந்தேகமே என்று கூறினார்.
இதனால், மஇகாவுக்கு எதிர்காலம் பிரகாசமாக இருப்பதாகவும் கூறிய விக்னேஸ்வரன், இனி கட்சியின் உறுப்பினர்களுக்காக மட்டுமே பாடுபடப் போவதாகவும், கட்சியை வலுவான பாதையில் செலுத்த அனைவரும் தன்னுடன் ஒத்துழைக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
கட்சியை மீண்டும் வலிமைப்படுத்தி இழந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளை மீண்டும் வெல்வதே கட்சியின் தலைவர் என்ற முறையில் தனது இலக்கு என்றும் கூறிய விக்னேஸ்வரன் அதற்காகப் பாடுபடப் போவதாகவும், தன்னுடன் இந்த முயற்சியில் இணையுமாறும் கட்சி உறுப்பினர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.
மஇகா, பாஸ் கட்சியுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளினால் எழுந்திருக்கும் சர்ச்சைகள் குறித்தும் விக்னேஸ்வரன் விரிவாக விளக்கமளித்தார். பாஸ் கட்சியினர் தங்களுக்கு அம்னோவை விட சிறந்த வரவேற்பை அளித்ததாகவும், மிகவும் சுமுகமாக நடைபெற்ற அந்த சந்திப்பின் மூலம், இரு தரப்புகளின் அரசியல் நிலைப்பாடுகளையும் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்ததாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இந்த புரிந்துணர்வு அடிப்படையில் பாஸ் கட்சி போட்டியிடும் இடங்களில் தாங்கள் போட்டியிடப் போவதில்லை என்றும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் பாஸ் கட்சி போட்டியிடக் கூடாது எனக் கேட்டுக் கொண்டு அவர்களின் ஆதரவைக் கோருவது என முடிவெடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த வாரம் நடைபெற்று முடிந்த கட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்ற மத்திய செயலவையினரைக் கொண்டு கட்சியின் உருமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாகவும் விக்னேஸ்வரன் தனதுரையில் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு மஇகாவின் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெறும் முதல் தேசியப் பொதுப் பேரவை இதுவாகும்.