கொழும்பு – இலங்கை அரசியலில் திடீரென ஏற்பட்டுள்ள குழப்பம் , சர்ச்சைகளைத் தொடர்ந்து, ரணில் விக்கிரமசிங்கே பிரதமராகத் தொடர்ந்து நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜெயசூரியா அதிரடியாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அதிபர் மைத்திரிபால சிறீசேனாவுக்கு கடிதமும் எழுதியுள்ளார்.
புதிய பிரதமர் நாடாளுமன்றத்தின் ஒப்புதலோடுதான் அதிபரால் நியமிக்கப்பட முடியும் என்பதால், பிரதமராகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ராஜபக்சே நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை தொடர்ந்து பிரதமராக நீடிப்பார் என்றும் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது அனுமதியின்றி நாடாளுமன்றத்தை முடக்கியதற்கும் சபாநாயகர் ஜெயசூரியா அதிபர் சிறீசேனாவுக்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இலங்கையில் நடந்து வரும் அரசியல் நிலவரங்களை தாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.