Home கலை உலகம் “சர்க்கார்” படக் கதை திருடப்பட்டது என்பது உறுதியானது

“சர்க்கார்” படக் கதை திருடப்பட்டது என்பது உறுதியானது

1174
0
SHARE
Ad

சென்னை – விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளி வெளியீடாக வெளிவரவிருக்கும் சர்கார் திரைப்படத்தின் கதை திருடப்பட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதை அடுத்த அந்தப் படத்தின் வெளியீட்டில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திரைப்பட எழுத்தாளரும், உதவி இயக்குநருமான வருண் இராஜேந்திரன் என்பவரின் ‘செங்கோல்’ என்ற கதையுடன் விஜய்யின் சர்கார் படக் கதை ஒத்திருப்பதாக தென்னிந்திய  திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் ஒப்புக் கொண்டு கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இந்த சங்கத்தின் தலைவராக இயக்குநர் கே.பாக்கியராஜ் செயல்படுகிறார்.

வருண் இராஜேந்திரனின் ‘செங்கோல்’ கதை 2007-இல் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

சர்கார் படக் கதை திருடப்பட்டது என்பது குறித்த வழக்கு எதிர்வரும் அக்டோபர் 30-ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அந்த சமயத்தில் சர்கார் திரைப்படத்தின் கதை குறித்து நீதிமன்றமும் தனது முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக, இதுபோன்ற வழக்குகளில் கடந்த காலங்களில் சமரசத் தீர்வுகள் காணப்பட்டு, புகார் கூறும் எழுத்தாளருக்கு உரிய தொகை வழங்கப்படும். சர்கார் படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இந்த விவகாரத்திலும் அவ்வாறே நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சர்கார் கதை திருடப்பட்டது என்பதை வன்மையாக மறுத்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் ஒருசார்பு முடிவை எடுத்துள்ளது என்றும், புகார் கூறியவரின் கதையைப் படித்த சங்கம் தனது சர்கார் கதையின் திரைக்கதையையும் படித்துப் பார்த்து இறுதி முடிவை எடுத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவ்வாறு செய்யாமல், புகார் கூறிய வருண் இராஜேந்திரனின் தரப்பு கதையை மட்டும் படித்து விட்டு முடிவை அறிவித்திருப்பது குறித்து கே.பாக்கியராஜூக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.