Home நாடு இலண்டன் கல்விப் பரிமாற்றத்தால், முதல் நிலையை அடைந்தது துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி

இலண்டன் கல்விப் பரிமாற்றத்தால், முதல் நிலையை அடைந்தது துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி

1950
0
SHARE
Ad
இணையம் வழி கல்விப் பரிமாற்ற நிகழ்ச்சியில் துன் சம்பந்தன் பள்ளி தலைமை ஆசிரியர் பழனி சுப்பையா, சுப.நற்குணன், முத்து நெடுமாறன்…

பீடோர் – கடந்த சனிக்கிழமை அக்டோபர் 27-ஆம் நாள் இலண்டனில் உள்ள திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியோடு இணையம் வழி கல்வித் தொடர்பை ஏற்படுத்தி பேராக், பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி புதிய சாதனை செய்துள்ளது. இதன்மூலம் தமிழ்க்கல்வி கற்றல் கற்பித்தலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.

இந்த முன்னுதாரணத்தைக் கொண்டு, மேலும் பல மலேசியத் தமிழ்ப் பள்ளிகள் அயல் நாடுகளில் உள்ள தமிழைக் கற்பிக்கும் பள்ளிகள், மையங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, அதன் மூலம் தமிழ்க் கல்வி மீதான பரிமாற்றங்களை, இணையத் தொழில்நுட்பங்களின் மூலம் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலண்டன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியிலிருந்து…

அக்டோபர் 27-ஆம் தேதி ஒரே நேரத்தில் இலண்டன் நேரப்படி காலை 10.00 மணிக்கு திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியிலும் மலேசிய நேரப்படி மாலை 5.00 மணிக்கு பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளியிலும் இந்த இணையம் வழிக் கல்விப் பரிமாற்றத்தை முன்னிட்டு சிறப்பு அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் சுப.சற்குணன் சிறப்புரை ஆற்றினார்.

#TamilSchoolmychoice

கடந்த 2015-இல் மலேசியக் கல்வி அமைச்சு உருமாற்றுப் பள்ளித் திட்டத்தினைத் (Program Sekolah Transformasi TS25) தொடங்கியது. அதற்காக மலேசியாவில் உள்ள 100 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் இடைநிலைப்பள்ளி, தேசியப்பள்ளி, சீனப்பள்ளி, தமிழ்ப்பள்ளி என 100 பள்ளிகள் இடம்பெற்றன. மலேசியாவில் 525 தமிழ்ப்பள்ளிகள் சார்பில் பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டது.

இணையப் பரிமாற்றத்தில் துன் சம்பந்தன் பள்ளி மாணவர்கள்…

உருமாற்றுப் பள்ளித் திட்டத்தில் 3 ஆண்டுகளில் 4 படிநிலைகளை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும். 4ஆம் படிநிலையின் இறுதித் திட்டத்தில்தான் இணையம் வழி உலகத் தொடர்பு (Globally Connected) இடம்பெற்றுள்ளது. ஆக, எல்லாத் படிநிலைகளையும் திட்டங்களையும் வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ள ஒரே பள்ளியாக துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி சாதனை படைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

“இந்த மாபெரும் சாதனைக்குக் காரணம் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் பழனி சுப்பையாவின் திறமைமிக்க தலைமைத்துவமும் பள்ளி ஆசிரியர்களின் ஒன்றுபட்ட உழைப்பும்தான் என்றால் மிகையாகாது. அந்த வகையில் தலைமையாசிரியர் பழனி சுப்பையா, துணைத் தலைமையாசிரியர்கள், செயலாளர் சாந்தி இரங்கசாமி, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியம் ஆகிய அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவிக்கின்றேன்” என சுப.நற்குணன் தனதுரையில் தெரிவித்தார்.

இலண்டன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியின் பங்களிப்பு

“இணையம் வழி உலகத் தொடர்பு திட்டத்தில் இணைந்து கொண்ட இலண்டன் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் பங்களிப்பு மிகவும் போற்றுதலுக்கு உரியது” என்றும் தனதுரையில் குறிப்பிட்ட நற்குணன், “மிகவும் குறுகிய காலத்திலேயே இந்தத் திட்டத்தைப் பற்றி புரிந்துகொண்டு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்த தலைமையாசிரியர் திருவாட்டி தவமணி மனோகரன், பள்ளி ஆசிரியர்கள், இலண்டன் தமிழர் முன்னேற்றக் கழகப் பொறுப்பாளர்கள் அனைவரும் நன்றிக்குரியவர்கள். குறிப்பாக, இலண்டனிலிருந்து பெரும் உதவிகளை வழங்கிய செலின் ஜோர்ஜ், இராச் பூபதி, ஹரிஸ் ஆகியோரை நான் பெரிதும் போற்றுகின்றேன். அவர்களின் ஈடுபாடு உண்மையிலேயே என்னுடைய உள்ளத்தை நெகிழச் செய்துவிட்டது” என்றும் கூறினார்.

“அனைத்திற்கும் மேலாக ஐரோப்பாவில் முதலாவது தமிழ்ப்பள்ளியை நிறுவிய ஐயா தேவதாஸ் அவர்களை இந்த நிகழ்ச்சியில் உலகத்தின் பார்வைக்கு அறிமுகப்படுத்தியுள்ளோம். 1975-இல் பத்து மாணவர்களைக் கொண்டு இலண்டன் மாநகரில் அவர் தொடங்கிய திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி இன்றைய நாளில் 200 மாணவர்களுடன் செயல்படுகிறது. மேலும் தற்பொழுது பிரிட்டன் முழுவதும் 75 தமிழ்ப்பள்ளிகளாகப் பல்கிப் பெருகியுள்ளது மாபெரும் சாதனையாகும். இப்படியொரு வரலாற்றை அமைதியாகச் செய்துள்ள ஐயா தேவதாஸ் அவர்களின் தமிழ்ப்பணி வணக்கத்திற்கு உரியது. அவரைத் தாழ்மையோடு வணங்கி எனது நன்றியினைச் சமர்ப்பிக்கின்றேன்” என்றும் நற்குணன் பாராட்டினார்.

“அடுத்து, இரண்டு நாடுகளில் உள்ள இரண்டு தமிழ்ப்பள்ளிகளுக்கும் இடையே உறவுப் பாலத்தை ஏற்படுத்திக் கொடுத்து நல்ல ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் வழங்கிய முரசு அஞ்சல் நிறுவனர் முத்து நெடுமாறனுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவருடைய இலண்டன் பயணம் தொடர்பான ஒரு செய்தியைச் செல்லியல் மின்னூடகத்தில் கண்டு அவரின் உதவியை நாடினேன். இருநாட்டுப் பள்ளிகளுக்கும் ஓர் அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுக்கக் கேட்டுக்கொண்டேன். அதன்படி முத்து நெடுமாறன் இந்த நிகழ்ச்சியின் பின்னணியில் இருந்து எங்களுக்குப் பல உதவிகளைச் செய்துள்ளார். அதுமட்டுமல்லாது அவருடைய பணியழுத்தங்களின் இடையே இன்றைய நிகழ்ச்சிக்கு வந்து கலந்துகொண்டு எங்களுக்கு உற்சாகமூட்டியுள்ளார்” என்றும் நற்குணன் தெரிவித்தார்.

“தமிழ்மொழி அழிவை நோக்கிச் செல்கிறது. தமிழுக்கு உலகத்தில் எதிர்காலம் கிடையாது. தமிழைப் பேசுவதற்கு ஆள் இல்லாமல் போய்விடும் என்றெல்லாம் சிலர் அவநம்பிக்கையைப் பரப்பி வருகிறார்கள். இலண்டன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியும் பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளியும் இணையத்தின் வழி இணையும், இந்த  நிகழ்ச்சி அந்தப் பொய்களை அடித்து நொறுக்கிவிட்டது. இரண்டு நாடுகளைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி மாணவர்கள் இணையம் வழி தமிழில் அழகாக உரையாடுவதைப் பார்க்கும்பொழுது இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இவர்கள் தமிழைக் கண்டிப்பாகக் கொண்டு செல்வார்கள் என்ற புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. தமிழ்மொழி மீண்டும் உலக அரங்கத்தில் மீண்டெழும் என்று நம்புகின்றேன்” என்றும் நற்குணன் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழ்மொழி மற்றும் தமிழ்க்கல்வி உலக அளவில் தொடர்ந்து நிலைப்பதற்கு மேலும் ஆக்கமான செயல்களும் திட்டங்களும் தேவைப்படுகிறது என்றும் தனதுரையில் சுட்டிக் காட்டிய நற்குணன், தக்கார் இணைந்து இதற்குத் தகுந்த நடடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அதற்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறினார்.

“21-ஆம் நூற்றாண்டுக் கற்றல் திறன் வளர்ச்சி பெற்று வரும் இன்றைய காலத்தில் நாம் தமிழ்க்கல்வியை அதற்கேற்ப உருமாற்றி வளர்த்தெடுக்க வேண்டும். இதன்வழி தாய்த்தமிழை அடுத்த நூற்றாண்டுக்கு வெற்றியோடு கொண்டு செல்ல முடியும். அதற்கு வித்திட்டுள்ள பீடோர் துன் சம்பந்தன் பள்ளியும் இலண்டன் திருவள்ளுவர் பள்ளியும் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளன” என்றும் பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் சுப.சற்குணன் தமது சிறப்புரையில் தெரிவித்தார்.