பெர்லின் – ஜெர்மனியின் சக்தி வாய்ந்த தலைவராக கடந்த 13 ஆண்டுகளாக அந்நாட்டை வழிநடத்தி வந்த எஞ்சலா மெர்கல் எதிர்வரும் 2021 அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என அறிவித்துள்ளார்.
சோஷியல் டெமோக்ரடிக் பார்ட்டி (Social Democratic Party) கட்சியின் தலைமைப் பொறுப்பையும் வகிக்கும் மெர்கல் அடுத்த கட்சித் தேர்தலிலும் போட்டியிடமாட்டேன் என்றும் அதன் பின்னர் எந்த ஓர் அரசாங்கப் பதவிக்கும் போட்டியிட மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார்.
ஜெர்மனியை ஐரோப்பாவின் மிகப் பெரிய பொருளாதார நாடாக உருமாற்றியதில் மெர்க்கல் பெரும்பங்கு வகித்தார்.
2005-ஆம் ஆண்டில் ஜெர்மனியின் அதிபராகப் பொறுப்பேற்ற மெர்க்கல், அந்தப் பதவியை ஏற்ற முதல் பெண்மணியாவார்.
ஒரு காலத்தில் கிழக்கு ஜெர்மனி – மேற்கு ஜெர்மனி என இரு பிரதேசங்களாக பிரிந்து கிடந்த போது, சோவியத் ரஷியாவின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த கிழக்கு ஜெர்மனியில் பிறந்து வளர்ந்த மெர்கல், பின்னர் இரண்டு ஜெர்மனிகளும் இணைந்தபோது அரசியலில் குதித்துப் பிரகாசிக்கத் தொடங்கினார்.
பலரும் அவரை சாதாரணமாகக் கருதிய வேளையில், கட்டம் கட்டமாக முன்னேறி, ஜெர்மன் அரசியலில் தனது அரசியல் எதிரிகளைச் சாய்த்து 2005-இல் ஜெர்மன் அதிபராகப் பொறுப்பேற்றார்.