கோலாலம்பூர் – இன்று நிதியமைச்சர் லிம் குவான் எங் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 2019-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அவர் குறிப்பிட்டிருந்த முக்கிய அம்சங்களில் பி-40 எனப்படும் வருமானம் குறைந்த 40 விழுக்காடு அடித்தட்டு ஏழைகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் முக்கிய இடம் பிடித்தன.
1 ஜனவரி 2019 முதல் அமுலாக்கப்படவிருக்கும் இந்த சலுகைகள் குறித்த சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
- மாதம் 2 ஆயிரம் ரிங்கிட் அல்லது அதற்கும் குறைவாகப் பெறும் குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரிங்கிட் உதவித் தொகை ஆண்டுக்கு வழங்கப்படும்.
- மாதம் ஒன்றுக்கு 2,001 ரிங்கிட் முதல் 3,000 ரிங்கிட் வரை வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 750 ரிங்கிட் உதவித் தொகை வழங்கப்படும்.
- 3,001 முதல் 4,000 ரிங்கிட் வரை மாத வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 500 ரிங்கிட் உதவித் தொகை வழங்கப்படும்.
- ஓய்வு பெற்றவர்களில் 1,000 ரிங்கிட் அல்லது அதற்கும் குறைவான ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு தலா 500 ரிங்கிட் உதவித் தொகை ஒருமுறைக்கு மட்டும் வழங்கப்படும்.
- ஒவ்வொரு குழந்தைக்கும், 18 வயது வரையில் 120 ரிங்கிட் உதவித் தொகை வழங்கப்படும். ஒரு குடும்பத்தில் கூடிய பட்சம் 4 குழந்தைகளுக்கு இந்த உதவித் தொகைகள் வழங்கப்படும். ஆனால், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கும், பேறு குறைந்த குழந்தைகளுக்கும் வயது வரம்பின்றி இந்த உதவித் தொகை வழங்கப்படும்.
- நாடு முழுமையிலும் குறைந்த பட்ச சம்பளம் 1,100 ரிங்கிட் என்ற நிர்ணய அளவு செயல்படுத்தப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- பி-40 என அழைக்கப்படும் அடித்தட்டு 40 விழுக்காடு மக்களுக்கு காப்புறுதித் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்கு கிரேட் ஈஸ்டர்ன் காப்புறுதி நிறுவனம் 2 பில்லியன் ரிங்கிட் வழங்க முன்வந்துள்ளது. இந்த நிதியை பேங்க் நெகாரா நிர்வகிக்கும். 4 முக்கிய வியாதிகள் பீடித்துள்ளவர்களுக்கு 8 ஆயிரம் ரிங்கிட் வரையிலான காப்புறுதிப் பாதுகாப்பு வழங்கப்படும்.
- பி-40 குழுவினரிடையே 50 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு உடல் பரிசோதனைகள் செய்துகொள்ள 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 8 இலட்சம் பேர் பயனடைவர். நாள் ஒன்றுக்கு மருத்துவ செலவுக்காக 50 ரிங்கிட் வழங்கப்படும் – இதன் உச்சபட்சத் தொகை 700 ரிங்கிட்டாகும்.
மேற்குறிப்பிட்ட அம்சங்களை சித்தரிக்கும் பெர்னாமா வரைபடத்தைக் கீழே காணலாம்: