சென்னை – கறுப்புப் பணம் தொடர்பில் கார்த்தி சிதம்பரம் மீது வருமான வரித்துறை வழக்குத் தொடர எழும்பூர் நீதிமன்றம் அளித்த அனுமதி தவறு என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் மீதான சொத்துகளை மறைத்ததாக கறுப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை வழக்குப்பதிவு செய்ததை இரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி கார்த்திக் ஆகியோர் இங்கிலாந்து நாட்டில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலும், அமெரிக்காவில் 3.28 கோடி ரூபாய் மதிப்பிலும் சொத்து வாங்கியுள்ளதாகவும், இந்த விவரங்களை அவர்கள் தங்களது வருமான வரி கணக்கில் காட்டவில்லை என்றும் இந்த வழக்கை வருமானவரித் துறை தொடர்ந்திருந்தது.
இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளில் உள்ள சொத்துக்களை மறைத்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மகன், கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் மீது கறுப்புப் பணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு விசாரணை சென்னை எழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம், விசாரித்து வந்தது. இந்நிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை இரத்து செய்யக் கோரி நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்பட மூன்று பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கறுப்புப் பணச் சட்டத்தின் கீழ் வருமான வரித் துறை வழக்கு தொடர எழும்பூர் நீதிமன்றம் அளித்த அனுமதி தவறு எனக் கூறி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினருக்கு எதிரான கறுப்பு பணச் சட்ட வழக்கை இரத்து செய்து உத்தரவிட்டனர்.