சென்னை – சர்கார் பட விவகாரம் தொடர்பான சர்ச்சைகளைத் தொடர்ந்து திடீர் திருப்பமாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து இயக்குனர் பாக்கியராஜ் (படம்) விலகியுள்ளார். எனினும் அவரது பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொள்ள அந்த சங்கத்தினர் மறுத்துவிட்டனர்.
“இயக்குநர் பாக்கியராஜ் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், முருகதாசிடம் நான் கெஞ்சியும் உடன்படாததால், வழியே இல்லாமல் சன் பிக்சர்ஸ் போன்ற ஒரு பெரிய நிறுவனத்தின் மிகப் பெரிய படமான சர்கார் கதையை நான் வெளியே சொல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்” எனக் கூறியிருக்கிறார்.
இது தவறு என உணர்ந்து சம்பந்தப்பட்ட சன்பிக்சர்ஸ் தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சர்கார் படம் தொடர்பான புகாரைப் பரிசீலித்து அதில் நியாமான முடிவு எடுக்கப்பட்டபோதும், அதில் அசௌகரியங்களை தான் சந்திக்க வேண்டி வந்ததாக தெரிவித்துள்ளார்.
அதற்கு முக்கியக் காரணம், தான் தேர்தலில் வெற்றி பெறாமல் வந்ததுதான் என பாக்கியராஜ் தெரிவித்துள்ளார். எனவே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பொறுப்பை ஏற்றுக்கொள்வேன் என பாக்கியராஜ் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அவர் சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பிலும் தனது அறிக்கையை வாசித்துவிட்டு சென்றார்.
தன்னைப் போல் நியமனம் மூலம் பதவிக்கு வந்த சங்கப் பொறுப்பாளர்களும் அந்தப் பதவிகளில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் எனவும் பாக்கியராஜ் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அவரது பதவி விலகல் கடிதத்தைத் தொடர்ந்து பாக்கியராஜுக்கு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் எழுதியுள்ள பதில் கடிதத்தில் தங்களின் பதவி விலகலை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றும் நீங்களே தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.