Home நாடு வல்லினம் கலை இலக்கிய விழா : 10 நூல்கள், 4 ஆவணப் படங்கள் வெளியீடு

வல்லினம் கலை இலக்கிய விழா : 10 நூல்கள், 4 ஆவணப் படங்கள் வெளியீடு

2058
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாட்டில் மிகத் தீவிரமாக இலக்கியத் தளத்தில் இயங்கி வரும் வல்லினம் குழுமத்தின் கலை இலக்கிய விழா 10 – ஒவ்வொரு வருடம் போலவே இவ்வருடமும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 18-ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெறுகிறது.

ஏழு நூல்களுடன் நான்கு ஆளுமைகளின் ஆவணப்படங்களும் இம்முறை கலை இலக்கிய விழாவில் வெளியீடு காண்கின்றன. எழுத்தாளர்கள் சு.வேணுகோபால் மற்றும் பவா செல்லதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ளும் வல்லினத்தின் ‘கலை இலக்கிய விழா’ இம்முறை பத்தாவது ஆண்டாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கான இடங்கள் சொற்ப அளவிலேயேயே இருப்பதால் ஆர்வமுள்ள இலக்கிய வாசகர்கள் தங்கள் வருகையை முன் பதிவு செய்துக்கொண்டு நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கும்படி வல்லினம் குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.

நிகழ்ச்சியில் வெளியீடு காணும் நூல்களின் விவரங்கள்:

#TamilSchoolmychoice

மீண்டு நிலைத்த நிழல்கள்

கடந்த 12 ஆண்டுகளாக ம.நவீன் நேர்காணல் செய்த பேட்டிகளின் தொகுப்பு நூலான இதில் மொத்தம் 24 மலேசிய – சிங்கப்பூர் ஆளுமைகள் இடம்பெற்றுள்ளனர்.

கலை இலக்கியம் சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் ஆய்வாளர்கள், அரசியல்வாதிகள், சமூகச் செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் என தேர்ந்தெடுக்கப்பட்ட நேர்காணல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

மலேசிய, சிங்கப்பூர் இந்தியர்களின் பல்வேறு வாழ்வின் போக்குகளை அதன் வரலாற்றுத் தடயங்களுடன் இந்த நேர்காணல்கள் வழி அறிய இயலும்.

மா.சண்முகசிவா சிறுகதைகள்

கடந்த 20 ஆண்டுகளாக மா.சண்முகசிவா எழுதியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை இதுவரை நூலுரு காணாதப் புதியச் சிறுகதைகள். அங்கதச் சுவையுடனும் உளவியல் நுட்பத்துடனும் எழுதப்பட்ட இக்கதைகள் மலேசிய நவீனத் தமிழ் இலக்கிய உலகுக்கு வலு சேர்க்கும் தரம் கொண்டவை. 8 சிறுகதைகள் அடங்கியுள்ள இது மா.சண்முகசிவாவின் இரண்டாவது சிறுகதை தொகுப்பு ஆகும்.

போயாக்-

கடந்த இரண்டு ஆண்டுகளில் ம.நவீன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. உள்மடிப்புகளைக் கொண்டுள்ள இவரது கதைகள் நுட்பமான வாசகனுக்குப் பல்வேறு திறப்புகளை ஏற்படுத்துபவை. மலேசியா மட்டுமல்லாமல் தமிழக விமர்சகர்களின் கவனத்தையும் ஈர்த்த சில சிறுகதைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. 8 சிறுகதைகள் அடங்கிய இத்தொகுப்பு மலேசியாவில் இதுவரை தமிழ் புனைகதைகளில் கவனம் கொள்ளாமல் இருந்த களங்களை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளன.

கே.எஸ்.மணியம் சிறுகதைகள் –

புலம்பெயர் தமிழர் வாழ்வின் அபத்தங்கள், குறைபாடுகள், தனிமனித, தேசிய அடையாள உருவாக்கத்தின் தேக்கம், மேலும் பலவித சர்ச்சைக்குறிய விடயங்களுக்கு இலக்கியவுரு கொடுப்பவர் கே.எஸ்.மணியம்.

தென்னாசியாவின் புலப்பெயர்வு (South Asian diaspora) வரலாற்றுப் பதிவுகளாக இதுவரை தமிழர்கள் கடந்து வந்திருக்கும் பாதையையும் இனி செல்ல வேண்டிய இலக்கையும் அதற்கான வழிகளையும் பேசும் கே.எஸ். மணியத்தின் ஆங்கிலப் படைப்புகள் முதன் முறையாக விஜயலட்சுமியின் மொழிப் பெயர்ப்பில் தமிழில் வெளிவருகிறது.

அவரவர் வெளி-

மலேசிய இலக்கியம் குறித்து தொடர்ந்து தன் கவனத்தைச் செலுத்தி வரும் அ.பாண்டியனின் நூல் விமர்சனங்களும் அறிமுகங்களும் அடங்கிய கட்டுரைத் தொகுப்பு இந்நூல். கறாரான விமர்சனங்கள் மூலம் படைப்பிலக்கியத்தை அணுகும் அவரது பார்வை மலேசிய தமிழ் இலக்கியத்தை அறிய விரும்புபவர்களுக்கு வழிகாட்டுவதோடு முந்தைய நிலைபாடுகளையும் அசைத்துப்பார்க்கும் தன்மையைக் கொண்டவை.

ஊதா நிற தேவதை–

தொடர்ந்து உலக சினிமா குறித்து எழுதிவரும் இரா.சரவணதீர்த்தாவின் கட்டுரைத் தொகுப்பு. பெண்ணியத்தை மையப்படுத்தி இயக்கப்பட்ட திரைப்படங்களில் உள்ள உள்ளார்ந்த குரலை அவரது கட்டுரைகள் பதிவு செய்கின்றன. திரைப்படத்தின் தொழில் நுட்பத்தையோ அதன் கதையையோ விவாதிக்காமல் இயக்குநர் பொதித்து வைத்துள்ள அதன் ஆன்மாவை தொட முயல்பவை இவரது சினிமா கட்டுரைகள்.

நாரின் மணம்-

வாழ்வில் தான் எதிர்க்கொண்ட எளிய அனுபவங்களின் நுண்மையான பகுதியைத் தொட்டு பேசுபவை ம.நவீன் பத்திகள். பெரும்பாலும் தனது பாலியத்தின் அனுபவங்களை பேசும் அவரது பத்திகள் கலைஞர்களிடம் இயல்பாக உள்ள அபோதத்தின் மனநிலையைத் திட்டுத்திட்டாக வெளிக்காட்டுபவை.

4 ஆவணப் படங்கள் வெளியீடு

ஏழு நூல்கள் வெளியீடு காணும் அதே வேளையில் நான்கு ஆளுமைகளின் ஆவணப்படங்களும் வெளியீடு காண்கின்றன.

துவக்கமும் தூண்டலும்

மா.செ.மாயதேவன் மற்றும் மா.இராமையா மலேசிய சிறுகதை இலக்கிய உலகின் முன்னோடிகள். முதல் சிறுகதைத் தொகுப்பை 50-ஆம் ஆண்டுகளில் வெளியிட்டவர்கள். அவர்களின் அனுபவங்களையும் தொடக்கக்கால இலக்கியப் போக்கையும் பதிவு செய்துள்ள ஆவணப்படம் இது. தனிமனித வாழ்வினூடாக இலக்கிய வரலாறை தேடும் முயற்சி இது.

காலமும் கவிதையும்

அக்கினி மற்றும் கோ.முனியாண்டி இந்நாட்டில் புதுக்கவிதை வளர்ச்சிக்கு உழைத்தவர்கள். நவீன இலக்கியச் சிந்தனை எனும் அமைப்பின் வழி புதுக்கவிதை போக்கைத் தீவிரமாக முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர்கள். மலேசியப் புதுக்கவிதையின் போக்கை இவர்களின் ஆவணப்படம் வழி பதிவு செய்யும் முயற்சி இது.

மூன்று குறுநாவல்கள் வெளியீடு

வல்லினம் குறுநாவல் பதிப்புத்திட்டம் 2017 இல் தொடங்கியது. சுமார் 14 குறுநாவல்கள் இந்தப் பதிப்புத் திட்டத்திற்கு வந்திருந்தன. இதில் இறுதிச் சுற்றுக்கு எட்டு நாவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. நாவல் எழுதியவர்களின் அடையாளம் அழிக்கப்பட்டு வெவ்வேறு நடுவர்களிடம் அனுப்பப்பட்டது. இறுதியில் பதிப்புக்குத் தகுதி கொண்டவை என மூன்று நாவல்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டன.

தெரிவு செய்யப்பட்ட நாவல்கள் எழுத்தாளர்கள் அனுமதியுடன் செறிவாக்கம் கண்டன. அதன் மையம் சிதையாமல் வடிவமும் மொழியும் கூர்மை செய்யப்பட்டது.
தேர்வு செய்யப்பட்ட நாவல்களின் விபரம்:

குறுநாவல் 1: ரிங்கிட்
ஆசிரியர் : அ.பாண்டியன்

குறுநாவல் 2 : மிச்சமிருப்பவர்கள்
ஆசிரியர் : செல்வன் காசிலிங்கம்

குறுநாவல் 3: கருங்காணு
ஆசிரியர்: அ.ரெங்கசாமி

வல்லினம் கலை இலக்கிய விழா 10 – நிகழ்ச்சி விவரங்கள்

நிகழ்ச்சி நாள்: 18.11.2018 (ஞாயிறு)

நேரம் : பிற்பகல் 2.00

இடம் : கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதி (ம.இ.கா தலைமையகம் எதிர்ப்புறம்)

அனைத்துத் தொடர்புக்கும்:

ம.நவீன் – 0163194522 (கோலாலம்பூர்)
அ.பாண்டியன் – 0136696944 (பினாங்கு, கெடா)
க.கங்காதுரை – 0124405112 (பேராக்)
சரவண தீர்த்தா – 0195652222 (நெகிரி, மலாக்கா, ஜொகூர்)

அடுத்து:

வல்லினம் கலை இலக்கிய விழா – 10 நிகழ்ச்சியில் வெளியீடு காணும் “மீண்டு நிலைத்த நிழல்கள்” நூலில் இடம் பெற்றுள்ள சில முக்கிய ஆளுமைகளின் நேர்காணல்கள் நிகழ்ச்சியின் முன்னோட்டமாக செல்லியலில் தொடர்ந்து இடம் பெறும்.