Home வணிகம்/தொழில் நுட்பம் “வர்த்தக மேம்பாட்டு இலக்குடன் கொண்டாடுவோம்” மைக்கி தலைவர் கோபாலகிருஷ்ணன்

“வர்த்தக மேம்பாட்டு இலக்குடன் கொண்டாடுவோம்” மைக்கி தலைவர் கோபாலகிருஷ்ணன்

1087
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசிய இந்தியர்கள் அனைவரும் ஒரே குடையின் கீழ் இணைந்து ஏற்றமிகு எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க வேண்டுமென மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத்தின் புதிய தேசியத் தலைவராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட டத்தோ  நா.கோபாலகிருஷ்ணன் (படம்) தமது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.

“ஒற்றுமைதான் நமது பலம். அதை இழந்து விட்டால் அனைத்தையும் நாம் இழந்து விடுவோம். பிறந்திருக்கும் இந்த தீபத் திருநாள் நமது ஒற்றுமைக்கு வழிவகுக்கட்டும்.தீபாவளி பெருநாளை மலேசிய இந்துக்கள் அனைத்து இனங்களுடன் இணைந்து ஒற்றுமையாக கொண்டாட வேண்டும். இந்த பொன்னாளில் ஏழை எளிய மக்களுக்கு உதவிக் கரம் நீட்டும் வேளையில் பேறு குறைந்தவர்களுக்கும் முதியவர்களுக்கும் அன்பளிப்புகளை வழங்குவோம்” எனவும் அவர் தனது செய்தியில் கேட்டுக் கொண்டார்.

“வர்த்தகத்தில் இந்தியர்கள் மேம்படும் போது நமது பொருளாதாரமும் மேம்பாடு காணும். அத்தருணத்தில் அனைத்து நிலைகளிலும் நமது இந்திய சமுதாயம் மேம்பட அதிக வாய்ப்பு உள்ளது” எனவும் கோபாலகிருஷ்ணன் சுட்டிக் காட்டினார்.

#TamilSchoolmychoice

“இந்திய சமுதாயத்தின் வர்த்தக மேம்பாட்டிற்காக பல நடவடிக்கைகளை மைக்கி முன்னெடுத்தது. மைக்கியின் புதிய தலைமைத்துவத்தின் கீழ், வர்த்தகத்தில் அனைத்து இந்தியர்களும் பயன் பெறுவதற்கு அனைத்து முயற்சிகளையும் அரசாங்கத்துடன் இணைந்து எடுக்கும்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். வர்த்தகத்தில் ஈடுபடும் இந்தியர்கள், அனைத்து உதவிகளுக்கும் மைக்கியை நாடலாம் என அவர் கேட்டுக்கொண்டார்.

இருள் நீங்கி ஒளி பிறப்பது போல் கருத்து வேறுபாடுகள் நீங்கி, ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியான ஒரு தொடக்கத்தையும் அனைவரும் அமைத்துக் கொள்ள வேண்டும் என அவர் தமது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.