Home நாடு 263 மில்லியன் ரிங்கிட் கையூட்டு – மூசா அமான் மீது 35 குற்றச்சாட்டுகள்!

263 மில்லியன் ரிங்கிட் கையூட்டு – மூசா அமான் மீது 35 குற்றச்சாட்டுகள்!

773
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – சபா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் டான்ஸ்ரீ மூசா அமான் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இன்று 35 குற்றச்சாட்டுகளை சுமத்தி நீதிமன்றத்தில் நிறுத்தியது.

சபாவில் வெட்டுமரக் குத்தகைகளை வழங்குவதற்காக மூசா அமான் 63,293,924-88 அமெரிக்க டாலர் கையூட்டாகப் (இலஞ்சம்) பெற்றார் என்றும் ஊழல் தடுப்பு ஆணையம் அந்தக் குற்றச்சாட்டுகளில் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தொகைக்கு ஈடான மலேசிய ரிங்கிட் மதிப்பு சுமார் 263 மில்லியன் ஆகும்.

#TamilSchoolmychoice

இந்த கையூட்டுப் பரிமாற்றங்கள் 2004 முதல் 2008-ஆம் ஆண்டு வரை ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் மூசா அமானின் பிரதிநிதிகள் மூலம் நடந்தேறியது.

இந்தக் குற்றச்சாட்டுகளில் பிரதானமாக இடம் பெற்றிருப்பவர் மூசா அமானின் நெருக்கமான சகாவாகக் கருதப்படும் மைக்கல் சியா எனப்படும் சியா தியன் ஃபோ என்பவர் ஆவார். ஊழல் தடுப்பு ஆணையத்தின் குற்றச்சாட்டுகளின் பட்டியலில் மைக்கல் சியாவின் பெயர் 16 இடங்களில் காணப்படுகிறது.

மூசா அமான் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், 14 நாட்கள் முதல் 20 ஆண்டுகள் வரை அவர் சிறைத்தண்டனையை எதிர்நோக்க நேரிடும். மேலும்,  கையூட்டாகப் பெற்ற தொகையைவிட ஐந்து மடங்கு கொண்ட தொகையை அபராதமாகவும் செலுத்த நேரிடும்.

கடந்த பொதுத் தேர்தலில் சுங்கை சிபுகா சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற – 67 வயதான மூசா அமான், ஜாலான் டூத்தாவில் உள்ள அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் குற்றம் சாட்டப்பட்டார்.

பொதுத் தேர்தல் முடிந்தவுடன் முதலமைச்சராக நியமனம் செய்யப்பட்ட மூசா அமான், அதன் பின்னர் சபா ஆளுநரை மிரட்டி முதலமைச்சராகப் பதவியேற்றார் என்ற புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார். அப்போது நாட்டை விட்டு இரகசியமாக வெளியேறிய அவர் சில மாதங்களுக்குப் பின்னர் நாடு திரும்பினார்.