Home நாடு வல்லினம் விழா: “எல்லாத் துறைகளிலும் விமர்சனம் தேவையாகிறது” – அ.பாண்டியன்

வல்லினம் விழா: “எல்லாத் துறைகளிலும் விமர்சனம் தேவையாகிறது” – அ.பாண்டியன்

2017
0
SHARE
Ad
வல்லினம் – எழுத்தாளர் அ.பாண்டியன்

(மலேசியாவில் தீவிரமாக இலக்கியத் தளத்தில் இயங்கி வரும் வல்லினம் குழுமத்தின் கலை இலக்கிய விழா 10 – எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 18-ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, 10 நூல்கள் வெளியீடு காண்கின்றன. அவற்றில் ஒன்று அ.பாண்டியனின் கட்டுரைத் தொகுப்பான ‘அவரவர் வெளி’ என்ற நூல். அதனை முன்னிட்டு வல்லினம் சார்பில் திரு கங்காதுரை, நூலாசிரியர் அ.பாண்டியனுடன் நடத்திய நேர்காணல் செல்லியலில் பதிவேற்றம் காண்கிறது)

கேள்வி: ‘அவரவர் வெளி’ உங்களுடைய இரண்டாவது நூல். முதல் நூலைத் தொடர்ந்து இரண்டாவது நூலும் கட்டுரை வடிவமாக வருவதற்கான காரணமென்ன?

அ.பாண்டியன்: நான் சிறுகதைகளையே தொடக்கத்தில் ஆர்வமுடன் எழுதிக் கொண்டிருந்தேன். ஆனால் அதிகம் இல்லை. சில சிறுகதைகள் நன்றாக அமைந்தன. பல சிறுகதைகள் சுமார் ரகத்தில் சேர்ந்தன. எழுதியதை எல்லாம் தொகுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. சிறந்தவற்றை மட்டும் தொகுத்து நூலாக்கினால் போதும் என்றே எண்ணுகிறேன். ஆகவே நான் எழுதிய கட்டுரைகள் நூலாக்கம் பெற தகுதியுடையவை என்று உணர்ந்ததால் இரண்டும் கட்டுரை நூல்களாகி விட்டன. ஆனால் ‘அவர்களின் பேனாவிலிருந்து கொஞ்சம் மை’ முற்றிலும் வேறு களம் சார்ந்தது. அது மலாய்ச் சிறுகதைளைப் பற்றிய விமர்சனங்கள் கொண்ட நூல். ‘அவரவர் வெளி’ நூல் மலேசியத் தமிழ்ச்சிறுகதைகள் சார்ந்த விமர்சனக் கட்டுரைகளைக் கொண்டது. அதேநேரம், இந்த ஆண்டு வல்லினம் பதிப்புத் திட்டத்தில் எனது குறுநாவல் ஒன்றும் தேர்வு பெற்று நூலாக வருவதில் மகிழ்ச்சி.

அ.பாண்டியனின் கட்டுரைத் தொகுப்பு ‘அவரவர் வெளி’
#TamilSchoolmychoice

கேள்வி: இலக்கிய விமர்சனங்கள் உண்மையிலேயே இலக்கியம் வளரத் துணை புரிகின்றனவா?

அ.பாண்டியன்: நிச்சயமாக துணைபுரிகின்றன. விமர்சனங்கள் எழுதப்படுவதன் நோக்கமும் அதுதான். இலக்கியம் மட்டும் என்றில்லை, எல்லா துறைகளிலும் விமர்சனம் தேவையாகிறது. சாதாரணமாக நாம் எல்லோருமே விமர்சனம் செய்பவர்கள்தான். சாப்பிடச் செல்லும் உணவகங்கள் முதல் மருந்தெடுக்கச் செல்லும் மருத்துவமனைகள் வரை எல்லாவற்றையும் ஒரு விமர்சனத்துக்குப் பின்னர்தான் நாம் முடிவு செய்கிறோம்.எல்லாத் திரைப்படமும் நல்ல படம் என்று நாம் சொல்வதில்லை. ஏதோ ஒன்றை, நாம் பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை என்று சொல்லும் கருத்தையே மேலும் துல்லியமான விளக்கங்களுடனும் கருத்துக்களுடனும் செறிவாக சொல்லும் போது அது விமர்சனமாகின்றது.
இலக்கிய விமர்சனம் என்பது ரசனை சார்ந்த உரையாடல் முறை. உரையாடல் இல்லாமல் ஒரு படைப்பை முழுமையாக புரிந்துகொள்ள முடியாது.எது உண்மை, எது போலி என்ற வேறுபாடு தெரியாமல் எப்படி நல்ல பொருளை முடிவு செய்வது? விமர்சனத்தின் வழி வாசகன் கலைப் படைப்பை அவனது வாசிப்புக்கு அப்பாலும் சென்று புரிந்து கொள்ள முடியும். புதிய திறப்புகளைப் பெறமுடியும்.ஒரு தேர்ந்த விமர்சனம் வாசகனின் கலைப்பார்வையை விசாலப்படுத்தும். படைப்புகளின் உள்ளிருக்கும் எல்லா சாத்தியங்களையும் விமர்சனங்கள் முன்வைக்கின்றன. இன்று நாம் சிறந்த நாவல்கள் அல்லது சிறுகதைகள் என்று கொண்டாடும் எல்லா படைப்புகளுமே பல அடுக்கு விமர்சனங்களைச் சந்தித்தவைதான். ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ என்கிற மிக முக்கியமான நாவல் வாசகப் பரப்பில் விமர்சனங்களின் வழிதான் கொண்டு செல்லப்பட்டது.
விமர்சனங்கள் இல்லாவிட்டால் இலக்கியம் தேங்கி விடும். விமர்சனங்கள் அதிகரிக்கும் போதுதான் தீவிர வாசிப்பும் தீவிர எழுத்தும் வெளிப்படும்.உலகில் விமர்சனங்கள் இல்லாத இலக்கியம் இல்லை.

ஆனால், விமர்சனம் என்பதை ‘குறை சொல்லுதல்’ என்ற புரிதலுடன் சிலர் பார்ப்பதால்தான் விமர்சனத்தின் மீதும் விமர்சகர் மீதும் வெறுப்பு ஏற்படுகிறது. விமர்சனத்தில் குறைகள் சுட்டிக்காட்டப்படுவது தவிர்க்க முடியாதது. ஆனால் நிறைகளும் பேசப்படுவதால்தான் நல்ல இலக்கியங்களை அடையாளம் காண முடிகிறது.

அ.பாண்டியனின் குறுநாவல் ‘ரிங்கிட்’

கேள்வி: மலேசிய இலக்கியச் சூழலில் இலக்கிய விமர்சனங்களால் படைப்பாளிகள் மனம் புண்படுவதாக கூறப்படுகிறது. இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

அ.பாண்டியன்: தமிழ்ச் சூழலில் பொதுவாகவே விமர்சனங்களால் மனம் சுருங்கும் படைப்பாளிகள் உள்ளனர். தமிழகம், இலங்கை போன்ற இலக்கியச் செயல்பாடுகள் செழித்த நாடுகளில் அது சாத்தியம். அதற்கான சில காரணங்களையும் நாம் அறியமுடியும்.
ஆனால் மலேசியாவில் விமர்சனங்களால் படைப்பாளிகள் மனம் புண்படுவதாக கூறப்படுவது சற்று மிகை கற்பனை என்றுதான் கூறுவேன்.மலேசியாவில் முறையான நூல் விமர்சனங்கள் செய்யப்படுவதில்லை.படைப்புகளை முன்வைத்து கலந்துரையாடல்களோ, விமர்சனக் கூட்டங்களோ, சந்திப்புகளோ நடைபெறுவதில்லை. ஆண்டுதோறும் நாட்டில் பல நூல்கள் வெளியிடப்படுகின்றன. ஆனால் அவற்றில் பத்து நூல்களைக் கூட முழுமையாக வாசித்து யாரும் கருத்து கூறுவதில்லை.ஓர் எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளரின் நூலைப்பற்றி வெளிப்படையாக புகழ்வதும் இல்லை; குறை சொல்வதும் இல்லை. மெளனமாக கடந்து செல்வதையே நாம் பார்க்கிறோம். ‘எதுக்கு தேவையில்லாத வம்பு’ என்ற மிதமான மனநிலையிலேயே எல்லோரும் இருக்க விரும்புகின்றனர்.நூல் வெளியீட்டுச் சடங்குக்குப் பிறகு அந்த நூலைப்பற்றி (அது எவ்வளவு முக்கியமான நூலாக இருந்தாலும்) ஒரு சிறிய முகநூல் குறிப்புக் கூட யாரும் எழுதுவதில்லை. ஊடகங்களும் நூல்களின் தரம் பற்றியோ, படைப்பாளிகள் என்னதான் எழுதுகிறார்கள் என்று அறிந்துகொள்ளும் அக்கறையோ இன்றியே இருக்கின்றன.

நூல் வெளியீட்டின் போது எழுத்தாளருக்கு வேண்டப்பட்டவர்கள் வாசிக்கும் மதிப்புரைகளும் சிறப்பு விருந்தினரும் அரசியல்வாதியும் சொல்லும் வெற்றுப் புகழ்ச்சியும் மட்டுமே ஒரு நூலைப் பற்றிய மதிப்பீடாக இங்கு இருக்கிறது. கடந்த சில வருடங்களாகத்தான் நூல் விமர்சனங்கள் வெகு சிலரால் எழுதப்படுகின்றன. அதற்குள் தங்கள் மனம் புண்படுகிறது என்று ஒரு படைப்பாளி சொல்வது இந்நாட்டு இலக்கிய வளர்ச்சியில் அவருக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டும். மாறாக, எழுத்தாளர் வாசக சந்திப்புகள் நடைபெற வேண்டும்.வாசகர்கள் நேரடியாக நூலைப்பற்றி எழுத்தாளருடன் விவாதித்து பேசும் நிலை வர வேண்டும்.அதுவே இலக்கிய வளர்ச்சியின் அடையாளம்.

கேள்வி: ரசனை விமர்சனம், கோட்பாட்டு விமர்சனம், இவை இரண்டில் உங்கள் விமர்சனங்கள் எப்படியானவை?

அ.பாண்டியன்: கோட்பாட்டு விமர்சனம் என்பது பல்வேறு இலக்கியக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு படைப்பை ஆராய்ந்து கூறுவது. உதாரணமாக, இருத்தலியல் கோட்பாட்டுக்கு உட்பட்ட நிலையில் ஒரு படைப்பை அணுகிப் பார்ப்பது என வைத்துக்கொள்வோம். அதற்கு முதலில் விமர்சகனுக்கு இருத்தலியல் பற்றிய அறிவு வேண்டும். அதன் கூறுகள், தத்துவங்கள் சார்ந்து படைப்பை ஆராயலாம்.ஆழ்ந்த பயிற்சியும் துறைசார் அறிவும் பெற்ற ஒரு விமர்சகரால்தான் இதை சிறப்பாக செய்யமுடியும்.
ரசனை விமர்சனம் என்பது ஒரு படைப்பைத் தேர்ந்த வாசகனாக வாசித்து அதன் அழகியலைத் தன் ரசனை சார்ந்து பேசுவது. கோட்பாட்டு விமர்சனம் விமர்சகர்களுக்கிடையில் பெரும் மாற்றங்கள் கொண்டிருப்பதில்லை.ஆனால் ரசனை விமர்சனம் விமர்சகனின் வாசிப்பு மனதிற்கு ஏற்ப மாற வாய்ப்புள்ளது.ஜெயகாந்தனின் ஒரு நாவலை நான் வாசித்துப் புரிந்து கொள்ளும் அதே நிலையில் இன்னொரு வாசகர் இருக்க மாட்டார்.அவர் என்னைவிட சிறப்பாக அந்நாவலை உள்வாங்கியிருக்கக்கூடும். தன் வாழ்க்கை அனுபவம், வாசிப்பு சார்ந்து நான் காணாத கோணங்களை அந்நாவலில் இருந்து அவர் பெறக்கூடும். ஆகவே அந்நாவலுக்கு நான் எழுதும் விமர்சனத்தை விட அவர் எழுதும் விமர்சனம் சிறப்பாக இருக்கும்.தமிழ்ச்சூழலில் ரசனை விமர்சனமே முதன்மையானது.க.நா.சு, வெங்கட சாமிநாதன், சி.மோகன் போன்ற பல முன்னோடிகள் ரசனை விமர்சனத்தை முன்னெடுத்தவர்கள்தான்.மலேசியாவில் கதை வகுப்பு நடத்திய சுப.நாராயணன், பைரோஜி.நாராயணன் போன்றவர்களும் ரசனை விமர்சனத்தின் வழிதான் இலக்கியத்தில் இயங்கியிருக்கிறார்கள்.நான் என் ரசனை சார்ந்த விமர்சனங்களை எழுதவே விரும்புகிறேன்.

கேள்வி: உங்களுடைய புரிதலின்படி விமர்சனமும் திறனாய்வும் ஒரே வகையான எழுத்து முறையா? அல்லது வேறு வடிவங்களா?

அ.பாண்டியன்: திறனாய்வு உடலை ஆராய்கிறதென்றால் விமர்சனம் படைப்பின் ஆன்மாவை ஆராய்கிறது. திறனாய்வு என்பது கல்விப்பரப்பில் பயன்படுத்தப்படும் கலைச்சொல். கல்வி உலக செயல்பாடு என்பதால் திறனாய்வுக்கு என்று வகுக்கப்பட்ட முறை ஒன்று உள்ளது. ஒரு படைப்பை, அதன் மொழி, கருத்து, அழகியல், உச்சம் என்று பல பகுதிகளாகப் பகுத்து அவற்றை விரிவாக ஆராய்ந்து எழுதுவது இலக்கியத் திறனாய்வு முறை. அது ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுத் தரும் ஒரு பாடத்திட்ட வரையறைக்கு உட்பட்ட இலக்கியச் செயல்பாடு என்று சொல்லலாம். அதற்கு என்ன விதமான படைப்பிலக்கியம் என பேதங்கள் இல்லை. வெகுசன இலக்கியம் தீவிர இலக்கியம் என பாகுபாடு இல்லாமல் பிரேதப் பரிசோதனை போல படைப்பிலக்கியத்தின் உடலையும் உத்திகளையும் மட்டுமே ஆராய்கிறது. ஆனால், இலக்கிய விமர்சனம் என்பது கல்வி உலகிற்கு வெளியே இலக்கியவாதிகள் செயல்படும் முறை. விமர்சனம் எழுத முறையாக வடிவம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் படைப்புகளை ஆழமாக வாசித்துப் புரிந்து கொண்டு நேர்மையுடன் முன்வைக்கப்படும் பதிவுகளாக விமர்சனங்கள் இருக்கின்றன. அது உத்திகளில் திளைக்காமல் கதையின் உள்மடிப்புகளுக்குள் சென்று புதிய கோணத்தில் கதையைக் கண்டடைகிறது.

கேள்வி: உங்கள் நூலில் உள்ள படைப்பாளிகளைத் தேர்வு செய்ததன் அடிப்படை என்ன?

அ.பாண்டியன்: இந்நூலில் மலேசியாவில் நவீன இலக்கியம் சார்ந்து செயல்படும் பத்து படைப்பாளிகளின் படைப்புகள் குறித்த விமர்சனங்கள் உள்ளன. இப்போதும் எழுதிக் கொண்டிருப்போர் பலரையும் உட்படுத்தியே இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஆண் படைப்பாளிகளும் பெண் எழுத்தாளர்களும் இதில் அடங்குவர்.பெரும்பாலும்,
எழுத்தாளர்களின் சிறுகதைகள் சார்ந்தே என் விமர்சனங்களை எழுதியுள்ளேன். இதில் படைப்பாளிகளின் காலவரிசைப்படி கட்டுரைகள் அமைந்திருப்பது எதிர்பாராதது.ஆனால் அதுவே முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் ஆகிவிட்டது.

கேள்வி: ஓர் இலக்கியப் படைப்பை விமர்சிக்கும் விமர்சகனுக்கு இருக்க வேண்டிய அடிப்படை தகுதியாக எதைக் கூறலாம்?

அ.பாண்டியன்: உழைப்பும் நேர்மையும் முக்கியம் என்று நினைக்கிறேன். ஒரு விமர்சனம் எழுத நினைத்தால் அதற்கான உழைப்பு அவசியம். முதலாவதாக, விமர்சிக்க எடுத்துக்கொண்ட இலக்கியப் பிரதியை முழுமையாக வாசித்து உள்வாங்க வேண்டும். நூலின் சுருக்கங்களை வாசித்தோ அல்லது மற்றவர் கூறும் கருத்துகளைக் கேட்டோ நமது விமர்சனத்தை எழுதவும் முடியாது, எழுதவும் கூடாது.விமர்சிக்கும் நூலைத் தவிர, தேவையான வேறு நூல்களையும் வாசிக்க வேண்டியது அவசியம். விமர்சகன் தான் விமர்சிக்கும் படைப்பில் இருந்து வாசகன் அறியாத அல்லது படைப்பாளியே அறியாத ஒரு விடயத்தையாவது புதிதாக கண்டறிந்து எழுத முடிந்தால் அதுவே சிறப்பான விமர்சனக் கட்டுரையாக இருக்கும். முன்முடிவுகளோடும் தனிப்பட்ட காழ்ப்புகளோடும் நூலை வாசிப்பதும் விமர்சனம் எழுதுவதும் தவறு. அதனால்தான் இலக்கிய நேர்மை தேவை. அந்தப் படைப்பு இலக்கியத்தில் ஓர் அங்கமாக இருக்க தகுதி உடையதா, இல்லையா என்பதைக் கூறும் பெரும் பொறுப்போடு விமர்சகன் செயல்படுவதால் வெற்று உணர்ச்சிக்கும் பழிவாங்கும் செயலாகவும் விமர்சனத்தைப் பயன்படுத்தக் கூடாது.

கேள்வி: புதிதாக எழுத வருபவர்களது அல்லது எழுதிக்கொண்டிருப்பவர்களது படைப்புகளை விமர்சனம் செய்யாது தொடர்ந்து எழுத தட்டிக் கொடுக்கவேண்டுமென சில தரப்பு பாடம் நடத்துவது பற்றி உங்களுடைய கருத்து என்ன?

அ.பாண்டியன்: விமர்சனத்தின் பயன் தெரியாதவர்கள் இவ்வாறுதான் கூறுவார்கள். அவர்கள் புதிய படைப்பாளிகள் மேல் காட்டுவது பரிவு அல்ல. இலக்கியத்தின் மேல் உள்ள அலட்சியம்.இதுவரை மலேசியாவில் இவ்வாறான பரிவுகள் காட்டப்பட்டதன் விளைவு என்ன?தட்டிக் கொடுத்து வளர்க்கப்பட்டதனால் இந்நாட்டில் எத்தனை சிறந்த எழுத்தாளர்களை உருவாக்க முடிந்திருக்கிறது?\
புதியவர்களுக்குச் சரியான வழிகாட்டல் தேவை. கல்விக் கூடங்களில் போதிக்கப்படும் இலக்கியப்பாடம், இலக்கியம் குறித்த மிக தட்டையான புரிதலையே கொடுக்கும். கல்விக்கூடங்களின் பாடத்திட்டங்கள் அப்படியானவை. ஆனால், வெளியே இலக்கியம் என்பது வெறும் நன்னெறி போதனைக்கான சாதனம் அல்ல என்பதை சுட்டிக்காட்டத்தான் வேண்டும். எழுத வருபவர்களுக்கு வாசிப்பில் முன்னேற்றம் வேண்டும்.கல்கியும் நா.பாவும்தான் எனக்குப் பிடித்தமான எழுத்தாளர்கள் என்று கூறிக்கொண்டு நவீன எழுத்துலகிற்கு வராமல் இருப்பது நல்லது. காரணம் அவர்களால் இதுவரை தமிழில் எழுதப்படாத ஒரு விடயத்தைக் கூட எழுத முடியாது.பொதுபுத்தி சமூகம் ஏற்றுக் கொண்டாடிக் கொண்டிருக்கும் விழுமியங்களை மீண்டும் எழுத எதற்கு புதிய படைப்பாளிகள்? நவீன இலக்கியம் வளர எப்போதும் ‘சொல் புதிது பொருள்புதிது’ என்ற தேடல்மிக்க பார்வை உள்ள படைப்பாளிகளே தேவை. அதற்கு புதிதாக எழுத வருபவர்களுக்கு விமர்சனங்களின் வழி வழிகாட்டுதல் மிக அவசியம் என்று நினைக்கிறேன்.

கேள்வி: உங்களுடைய இலக்கியப்பயணத்தில் அடுத்து மேற்கொள்ளவிருக்கும் திட்டங்கள் என்ன?

அ.பாண்டியன்: முன்பைவிட இப்போது வாசிப்பு குறைந்துவிட்டது. ஆகவே வாசிப்பை அதிகப்படுத்த வேண்டும்.வல்லினம் குறுநாவல் பதிப்புத் திட்டத்தில் பங்கெடுத்து குறுநாவல் எழுதிய பிறகு நாவல் எழுதும் ஆர்வம் வந்திருக்கிறது. ஆகவே நாவல் எழுதுவது அடுத்த திட்டமாக இருக்கும்.

குறிப்பு:

அ.பாண்டியனின் நூலை வாங்க 18.11.2018இல் நடக்கும் வல்லினம் கலை இலக்கிய விழாவில் வாசகர்கள் கலந்துகொள்ளலாம்.

நிகழ்ச்சியின் விபரங்கள்:

நாள்: 18.11.2018 (ஞாயிறு)
இடம்: கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதி, கோலாலம்பூர்
நேரம்: மதியம் 2.00 – மாலை 5.30

தொடர்புடைய முந்தைய கட்டுரைகள்: