சென்னை – ‘சர்கார்’ படத்தில் இடம் பெற்ற அதிமுகவுக்கு எதிரான காட்சிகளை நீக்க வேண்டும் என்றும், வில்லிக்கு கோமளவல்லி என்ற பெயர் சூட்டி மறைமுகமாக ஜெயலலிதாவைச் சாடியிருப்பதை எதிர்த்தும் அதிமுக தொண்டர்கள் தமிழகத்தின் சில திரையரங்குகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அந்தப் படத்தின் சில காட்சிகள் நீக்கப்படுவதாக திரையரங்குகளுக்கான உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அறிவித்தார்.
இலவசப் பொருட்களை தீயிட்டு எரிக்கும் காட்சி உள்ளிட்ட சில சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாகவும், கோமளவல்லி என்ற பெயர் ஒலிக்கும் இடங்களை ஒலியிழப்பு செய்வதாகவும் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்திருக்கிறார்.
பட இயக்குநர் முருகதாஸ், படத் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ், ஆகியோரின் அனுமதியுடன் இந்த காட்சிகள் நீக்கப்படுவதாகவும், நாளை வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு இந்தக் காட்சிகளின் நீக்கத்திற்கான அனுமதியை தணிக்கைக் குழுவிடம் இருந்து பெற்ற பின்னர், மதியக் காட்சிகளில் நீக்கப்பட்ட காட்சிகளோடு ‘சர்கார்’ திரையிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில், சில திரையரங்குகளில் அதிமுகவின் எதிர்ப்புக்கு அஞ்சி சர்கார் படத்தின் இரவுக் காட்சிகள் இரத்து செய்யப்பட்டிருக்கின்றன.